top of page

தஞ்சை, திருச்சியை பாரம்பரிய மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்

கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் நடைபெற்ற விழாவில், ஆக்ஸ்போர்டு, மான்ட்ரீல் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் ஜேம்ஸ் மேனார்டுக்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருதை வழங்குகிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழக கென்னடி அரசு நிர்வாகப் புல சிறப்பு ஆலோசகர் மங்களம் சீனிவாசன். உடன் சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். சேதுராமன், புலத் தலைவர் எஸ். வைத்யா சுப்பிரமணியம்.

தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களை கலாசார, பாரம்பரிய மாவட்டங்களாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் பண்பாட்டுக் கழகம் அறிவிக்க வேண்டும் என்று, ஹார்வர்ட் பல்கலைக்கழக கென்னடி அரசு நிர்வாகப் புல சிறப்பு ஆலோசகர் மங்களம் சீனிவாசன் வலியுறுத்தினார்.

கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் 2 நாள்கள் நடைபெறும் உலக அளவிலான எண்ணியல் கணிதவியல் மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:

கணிதமேதை ராமானுஜன் பிறந்த தஞ்சாவூரையும், இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன் பிறந்த திருச்சி மாவட்டத்தையும், ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் பண்பாட்டுக் கழகம், கலாசாரம், பாரம்பரியம் நிறைந்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். ராமானுஜன் வாழ்ந்த காவிரி டெல்டா பல்வேறு வகைகளில் எண் கணிதவியலில் தொடர்பு உடையதாக இருந்துள்ளது.

சோழர்கால நீர்ப்பாசன முறை, குறிப்பாக கல்லணையின் கட்டுமானம், எண்ணியலில் பெருமளவிலான ஈடுபாடு, தெய்வ வழிபாட்டில் எண்ணியலின் தொடர்பு ஆகியவை குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் பல்கலைக்கழகங்களில் பயிலாமலேயே மக்கள் எண்கணிதத்தில் சிறப்பான நிலையை அடைந்திருந்தனர். கணிதம், அறிவியல் ஆகியவற்றை அனைவரும் அறிவது அவசியம் என்றார் அவர்.

தொடர்ந்து, கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சாஸ்த்ரா-ராமானுஜன் விருதை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கனடாவின் மான்ட்ரீல் பல்கலைக்கழகங்களின் கணிதப் பேராசிரியர் ஜேம்ஸ் மேனார்டுக்கு (27) அவர் வழங்கினார்.

இந்த விருது 10 ஆயிரம் அமெரிக்கா டாலர் பரிசுத் தொகையுடன் கூடியது. புளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிருஷ்ணசாமி அல்லாடி தலைமையிலான சாஸ்த்ரா- ராமானுஜன் விருதுக் குழுவினர் ஜேம்ஸ் மேனார்டை விருதுக்கு தேர்வு செய்தனர்.

விழாவுக்கு, சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். சேதுராமன் தலைமை வகித்தார்.

விழாவில், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் திட்டம், மேம்பாட்டுத் துறை புலத் தலைவர் எஸ். வைத்யா சுப்பிரமணியம், சீனிவாச ராமானுஜன் மையத்தின் புலத் தலைவர் கே.ஜி. ரகுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கணிதவியல் மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், இந்தியாவில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

Source : http://www.dinamani.com

6 views0 comments

Recent Posts

See All
bottom of page