top of page

​குழலூதும் முருகன்!!

வா.ரவிக்குமார்

thoodhari.jpg

துதாரி வாத்தியம் வாசிக்கும் கலைஞர் (கோப்புப்படம்)

கலைமகளின் கைப்பொருளான வீணை, கண்ணன் ஊதும் குழல் என்று நமது பாரம்பரியமான வாத்தியங்கள் அனைத்துமே இறைவனோடு இரண்டறக் கலந்தவையாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நம்முடைய செவ்வியல் இலக்கியங்களிலேயே இதற்கான சான்றுகள் பல இருக்கின்றன.

இந்தச் சான்றுகளை அடியொட்டியும் தனிப்பட்ட ஆராய்ச்சியின் மூலமாகவும் `தெய்வீக இசை வாத்தியங்கள்’ என்னும் பெயரில் மாதத்துக்கு ஒன்றாக பன்னிரண்டு மாதங்களுக்கு கணினி உதவியுடன் கருத்துரை நிகழ்த்திவருகிறார் வயலின் கலைஞரான டாக்டர் எம்.லலிதா.

வயலின் சகோதரிகளில் (லலிதா-நந்தினி) மூத்தவரான லலிதா, “மத்திய கலாச்சார மையத்தின் ஆதரவுடனும் நடனமணி நந்தினி ரமணியின் வழிநடத்தலுடனும் இந்தத் தொடர் நிகழ்ச்சியை கடந்த பத்து மாதங்களாக நடத்திவருகிறேன். முதல் நிகழ்ச்சியாக நான் எடுத்துக் கொண்டது வீணைதான். வீணை என்னும் வாத்தியம் புராண ரீதியாகவும் பாரம்பரியமாகவும் எப்படியெல்லாம் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்னும் விளக்கத்துடன் வரலாற்று ரீதியான சான்றுகளையும் இந்த நிகழ்ச்சியின்போது விளக்கினேன்” என்றார்.

ஆவுடையார்கோவிலில் யோகாம்பிகை ஆலயத்தில் சாயரட்சை பூஜையின்போது கெத்துவாத்தியம் எனப்படும் ஜல்லரி வாசிக்கப்படுகிறது. இந்த சம்பிரதாயத்தை பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் தலைமுறையில் வருபவர் ஆவுடையார்கோவில் எச். சுப்பிரமணியன். ஜல்லரி வாத்தியத்தை அவரைக் கொண்டே வாசிக்கவைத்து ஒரு கருத்துரை விளக்கத்தை அளித்தார் லலிதா.

“புல்லாங்குழல் என்றதுமே நம் எல்லோருக்கும் கண்ணன்தான் நினைவில்வரும் தெய்வமாக இருப்பார். ஆனால் நக்கீரன் அருளிய `திருமுருகாற்றுப்படை’யில் முருகன் குழலூதியதாக ஒரு வரி வருகிறது. இதைப்போன்ற பல ஆச்சரியமான தகவல்கள் இந்த ஆய்வுக்காக ஈடுபட்டபோது கிடைத்தன” என்றார்.

கிராமப்பகுதிகளில் சிறு தெய்வ வழிப்பாட்டுகளின்போது வாசிக்கப்படும் வாத்தியங்களைக் குறித்தும் ஆராய்ந்திருக்கிறீர்களா?” என்னும் நம் கேள்விக்கு, “சிறு தெய்வம், பெரிய தெய்வ வழிப்பாடு என்றெல்லாம் நான் பாகுபாடுத்திக் கொள்ளவில்லை. தமிழகத்தின் பல கிராமங்களில் சிறு தெய்வ வழிப்பாட்டின்போது வாசிக்கப்படும் கொம்பு போன்ற வாத்தியங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்” என்றார்.

நந்தி தேவரால் வாசிக்கப்பட்ட `ராஜ வாத்தியம்’ எனும் பெருமையைப் பெற்றது மிருதங்கம். இந்த வாத்தியத்தை அடியொற்றி சிலவகையான மாறுதல்களுடன் வடிவமைக்கப்பட்ட மிருதங்க – கோல் குறித்தும் லலிதா ஒரு நிகழ்ச்சி அளித்துள்ளார்.

“கேரள மாநிலத்தில் கோயில்களில் நடக்கும் திருவிழாக்களிலும் தெய்யம் சடங்குகளிலும் வாசிக்கப்படும் செண்டா, செண்டே, துதாரி, இந்த ஆய்வின்மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. மகாராஷ்டிரத்தில் உள்ள கோயில்களிலும் பாரம்பரியமிக்க இந்த துதாரி வாசிக்கப்படுகின்றது. யூதக் கலாச்சாரத்தில் சோஃபர் என்னும் வாத்தியத்தின் குறிப்புகள் துதாரியோடு ஒத்துப்போகின்றன.

தென் தமிழகத்தின் கோயில்களில் பரவலாக வாசிக்கப்படுவது நாகசுவரம். ஒருகாலத்தில் கல்லால் செய்யப்பட்ட நாகசுரம் கூட இருந்திருக்கிறது. தமரு அல்லது உடுக்கை என்னும் வாத்தியம் பற்றி ஆராயும்போது, இந்துமதச் சடங்குகளில் இந்த வாத்தியத்துக்கு இருக்கும் பங்களிப்பைப் போன்றே திபெத்தில் புத்த மதச் சடங்குகளின்போதும் இது வாசிக்கப்படுகின்றது.

இந்த வாத்தியத்துக்கும் ஜப்பானின் பாரம்பரிய வாத்தியமான சூசுமிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரிந்தது” என்ற லலிதா, கஞ்சிரா வாத்தியம் குறித்து தனக்குக் கிடைத்த சுவையான தகவலை குறிப்பிட்டார்.

“கர்நாடக மாநிலம், ஹரிஹராபுரா மடத்தில் முப்பெரும் தேவிகளின் சிலைகளில், லஷ்மி கஞ்சிரா வாசிப்பது போன்ற சிற்பம் உள்ளது. இசைக்கும் இறைத்தன்மைக்கும் பாலமாக வாத்தியங்கள் காலம்காலமாக இருந்திருக்கின்றன என்பதை மக்கள் மேடையில் தெரிவிப்பதற்கான வாய்ப்பாக இந்த ஆய்வு அமைந்தது” என்கிறார் நெகிழ்ச்சியுடன் லலிதா.

Courtesy - The Hindu

7 views0 comments

Recent Posts

See All
bottom of page