top of page

ஹரதத்தர் சரித்திரம்


முன்னுரை: ஹரதத்தரின் சரித்திரத்தை அறிந்து கொள்வதன் முன் அந்த மகான் அவதரித்த கஞ்சனூர் என்ற ஸ்தலத்தின் மகிமையைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அந்த ஸ்தலத்திற்குச் சென்று தரிசிக்க வேண்டும். ஹரதத்தர் விஜயம் செய்த சப்த ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடவேண்டும். ஆயுளில் ஒரு முறையாவது தை மாதத்தில் வரும் ஹரதத்தர் ஆராதனையிலும், மாசியில் வரும் சப்தஸ்தான உத்சவத்திலும் பங்கு பெற வேண்டும். அவருக்கு உபதேசம் செய்த தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் சில நிமிஷங்களாவது தியானம் செய்ய வேண்டும்.

கஞ்சனூர் தல வரலாற்றுச் சுருக்கம்: மயிலாடுதுறையிலிருந்து காவிரின் வடகரையை ஓட்டிச் செல்லும் பூம்புகார்- கல்லணை சாலையில் அமைந்துள்ளது கஞ்சனூர் என்ற தலம் ஆகும். இதற்குச் செல்வதற்கு மயிலாடுதுறையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு. இங்குள்ள கற்பகாம்பிகா சமேத அக்னீசுவர சுவாமி ஆலயம் திருநாவுக்கரசு நாயனாரது தேவாரத் திருப்பதிகம் பெற்றதாகும். அப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் " கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே " என்ற மகுடத்துடன் நிறைவு பெறும். பவிஷ்யோத்ரபுராணம் இந்த ஸ்தலத்தைக் கம்ஸபுர க்ஷேத்ரம் என்று குறிப்பிடுகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தர வாஹினியாகக் காவிரி பாயும் இந்த பலாசவன க்ஷேத்திரத்திற்கு வந்து பராசர முனிவர் மஸ்யகந்தி என்ற செம்படவப் பெண்ணின் தொடர்பால் ஏற்பட்ட தோஷத்தை, மாசி மகத்தன்று அக்நீசுவரரின் தரிசனம் பெற்றதால் நீங்கப் பெற்றார். மாண்டவ்ய புத்திரர்களும் மாசி உத்தரத்தன்று ஆனந்த தாண்டவ தரிசனம் பெற்றுத் தங்களது பாவம் நீங்கப்பெற்றனர். கம்ஸன் என்ற பாண்டிய மன்னன் இத்தலத்தை வழிபட்டுத் தன் நோய் நீங்கப்பெற்றவனாய் , திருப்பணிகள் பல செய்வித்தான். பிரமனுக்குத் ( கஞ்சன், விரிஞ்சி ஆகிய பெயர்கள் பிரமனைக் குறிப்பன ) திருமணக்கோலம் காட்டியதால் இத்தலம் கஞ்சனூர் என்ற பெயர் பெற்றது என்றும் கூறுவர். ஒருசமயம் பிரமனின் யாகத்தில் அதிகமான நெய்யைப்புசித்ததால் அக்னிக்குப் பாண்டு ரோகம் வந்தது. அதனை இங்கு வந்து போக்கிக் கொண்டதால் சுவாமிக்கு அக்னீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. சந்திரனும் இங்கு வழிபட்டுக் குருசாபம் நீங்கப்பெற்றான். ஹரதத்தர் வரலாறு திருமாலின் இருபத்தைந்தாவது அவதாரம் எனக் கருதப்படுபவர் ஹரதத்தர் ஆவார். ஒரு சமயம் தேவாசுரப் போரில் தோல்வியடைந்த அசுரர்கள் பிருகு முனிவரது ஆசிரமத்தைத் தஞ்சமாக அடைந்தனர். முனிவர் வெளியே சென்றிருந்தபடியால் அவரது மனைவி , அவ்வசுரர்களுக்கு இரங்கித் தஞ்சம் தந்து உதவினார். அசுரர்களைத் தேடிவந்த திருமால், முனிவரது ஆசிரமத்தை அடைந்து ரிஷி பத்தினியின் மீது சக்கராயுதத்தை ஏவ, அது அவளது சிரத்தை அறுத்தெறிந்தது. இதை அறிந்த முனிவர் விஷ்ணுவைப் பல ஜன்மங்கள் எடுக்குமாறு சபித்தார். பின்னர் பஞ்சாக்ஷர மகாமந்திரம் ஓதித் தன் மனைவியின் உயிரைத் திரும்பப்பெற்றார். சாப விமோசனம் பெற வேண்டித் திருமால் சிவபிரானைக் குறித்துக் கடும் தவம் மேற்கொண்டார். அதனால் சிவபிரான் அவற்றுக்குக் காட்சி தந்தருளினார். " நீ கஞ்சனூர் சென்று தவம் செய்தாயானால் மனம் சமாதானம் அடைவாய்" எனக் கூறியருளினார். அதன்படி விஷ்ணுவும் கஞ்சனூரை அடைந்து பல்லாண்டுகள் தவம் செய்து வந்தார். அதனால் மகிழ்ந்த ஈசன், " எனது பக்தனது சாபத்தை முற்றிலும் மாற்றாமல் சற்றுக் குறைத்து அருளுவேன். அதாவது இருபத்தைந்து அவதாரங்கள் நீ எடுக்க வேண்டும். அவற்றுள் ஐந்தில் மட்டும் நீ கர்வம் அடையும் போது யாமே அதை அடக்கிக் கர்வ பங்கம் செய்வோம். பிற இருபது அவதாரங்களிலும் நீ எம்மை வழிபடுவாயாக. அப்போது உனக்கு அருளுவோம் எனத் திருவாய் மலர்ந்தருளினார். முன்னம் நீ திரிபுராதிகளிடம் நாரதருடன் சென்று வேத மார்க்கத்திற்குப் புறம்பாக நடக்கத் தூண்டிய பாவத்தைப் போக்கிக் கொள்ள கஞ்சனூரில் வைஷ்ணவக் குடும்பத்தில் தோன்றி, சிவபரத்துவத்தை நிலை நாட்டி சைவக் கிரந்தங்களை இயற்றி, நிறைவாக நம்மை வந்து அடைவாயாக" என்று அருள் செய்தார்.

கஞ்சனூரில் வசித்த காசிப கோத்திரத்தில் பிறந்த வாசுதேவர் என்ற வைஷ்ணவப் பிராமணரின் தவத்தினால் மகாவிஷ்ணுவே அவரது குமாரனாக சுதர்சனாவதாரமாக அவதரித்தருளினார். இதனால் பெரிதும் மகிழ்ந்த வாசுதேவர், குழந்தைக்கு சுதர்சனன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அக்குழந்தை சிறு வயதிலிருந்தே, சிவபக்தி மிக்கவனாகத் திகழ்ந்தான். அக்னீசுவரர் கோயிலுக்குத் தவறாமல் சென்று வழிபட்டு வந்தான். அவனது இச்செயலை வாசுதேவர் எத்தனையோ தடுக்க முயன்றும் பலனில்லை. உணவு கொடுக்காமல் அவனை வருத்தலானார். இதனால் மனம் வருந்திய அப்பாலகன், அக்னீசுவரர் கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதியை அடைந்து தியானத்தில் ஈடுபட்டான். இறைவனைப் பலவாறு துதித்து வழிபட்டபின் நிறைவாகச் சோர்வுற்று நிலத்தில் சாய்ந்து விட்டான். அப்போது கணங்களும் முனிவர்களும் சூழ ரிஷபாரூடராக பார்வதி தேவியுடன் பரமேசுவரன் காக்ஷி அளித்து, அவனைத் தேற்றி, அவனுக்கு எல்லாக் கலைகளும் வருமாறு வரமருளினார். பின்னர் அவனைக் கருணையினால் நோக்கி, " நீ உனது உடல் பொருள்,ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீக்ஷா நாமம் தந்தோம். உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் " என்று அருளிய பிறகுத தம்மை மறைத்தருளினார். வீட்டிற்குத் திரும்பிய ஹரதத்தர் தமக்குப் பெருமான் அருளியதைத் தாய்- தந்தையரிடம் எடுத்துரைத்தார். இதைக் கண்டு வாசுதேவருக்குக் கோபம் மூண்டது. அவ்வூரில் வாழ்ந்து வந்த வைஷ்ணவப் பிராமணர்கள் ஒன்று கூடி, " இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், " சிவனே பரம்பொருள்" என்று நிரூபிக்க வேண்டும். முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும்" என்றார்கள். ஹரதத்தரும் அக்னீசுவரர் ஆலய தரிசனமும் ஆன்மார்த்த பூஜையும் செய்து விட்டுப் பெருமாள் கோயிலுக்குச் சென்று தீக் குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, " வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ள படியால் இம்முக்காலி அடியேனுக்குக் குளிரட்டும் " என்று கூறி, சிவபரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும் கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது. தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர். பாண்டிய மன்னனான சிவ லிங்க பூபாலன் என்பவன் ஹரதத்தரின் பெருமையைக் கேள்விப்பட்டுக் கஞ்சனூரை அடைந்து அவரை வணங்கி, அவருக்குக் கனகாபிஷேகம் செய்வித்தான். அவனது வேண்டுகோள் படி ஹரதத்தர் அவனுக்கு சிவ தீக்ஷை செய்வித்து, வட மொழியில் சுருதி சூக்த மாலை என்ற நூலை இயற்றி, அதற்கு அவனையே உரை எழுதும் படிப் பணித்தார். பாண்டிய மன்னனும் அந்நூலுக்கு சதுர்வேத தாத்பர்ய சங்கிரகம் என்ற உரையை எழுதி அதனைக் கஞ்சனூர் சென்று ஆசிரியப்பெருமானிடம் சமர்ப்பித்தான். ஹரதத்தர், சிவ பரத்துவத்தை நிலைநாட்டும் நூல்களாகத் தச ஸ்லோகி என்பதையும், ஹரி-ஹர தாரதம்யம் என்ற 108 சுலோகங்கள் அடங்கிய நூலையும் இயற்றியருளினார். ஹரதத்தருக்குப் பதினெட்டு வயது வந்ததும், கமலாக்ஷி என்ற பெண்ணை அவருக்கு மணம் செய்துவித்தார்கள். அவருக்குத் தேவையான பொருள்களை சிவலிங்க பூபதி மன்னன் அவ்வப்போது அனுப்பி வைத்துக் கொண்டிருந்தான். அன்றாட நியமங்களாகக் காவிரியில் நீராடுதல், கஞ்சனூர் அக்னீசுவரர் கோயில் தரிசனம், மற்றும் அருகிலுள்ள திருக்கோடிகா(வல்), (வட) திரு வாலங்காடு, திருவாவடுதுறை, (தென்) குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய ஆறு சிவஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்தல் என்று ஏழு ஸ்தலங்களையும் கால் நடையாகவே சென்று வழிபட்டு வந்தபிறகு, அதிதியுடன் போஜனம் செய்து வந்தார். ஹரதத்தர் வாழ்வில் நடைபெற்ற அற்புதங்கள் சப்த ஸ்தான யாத்திரை மகிமையை உணர்த்தியது: பல தலங்களைத் தரிசித்தவனாக உறையூர் சோழன் ஒருவன் கஞ்சனூரை அடைந்து சிவாலய தரிசனத்திகுப் பின் ஹரதத்தரின் வீட்டிகுச் சென்று அவரை வணங்கி, " அடியேன் கயிலையைக் காண விரும்புகிறேன். அதற்கு ஒரு வழியைத் தேவரீர் கூறி அருள வேண்டும் " என்று வேண்டினான். அதற்கு ஹரதத்தர், " மன்னனே, முதலில் கஞ்சனூர் ஆலயத்தை வழிபட்டு விட்டுக் கால் நடையாகவே அருகிலுள்ள திருக் கோடிகா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, தென் குரங்காடுதுறை (ஆடுதுறை), திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய சிவ ஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு அரை ஜாமத்திற்குள்ளாக மீண்டும் கஞ்சனூர் வந்து அக்நீசுவரரையும் கற்பகாம்பிகையையும் தரிசனம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்தால் உடனே கயிலையை அடையலாம்" என்றார். மறுநாள் சோழன் குதிரையில் ஏறி, பின்னால் குடை பிடிப்பவன் ஓடி வர, அரை ஜாமத்திற்குள் யாத்திரையைப் பூர்த்தி செய்துவிட்டுக் கஞ்சனூர் திரும்பினான். அவனது வருகைக்காக ஹரதத்தர் கோயில் வாயிலில் காத்திருந்தார். கோயில் வாயிலை அடைந்ததும், குதிரையும், அதன் பின்னால் ஓடி வந்த குடை பிடிப்பவனும் மூர்ச்சித்து விழுந்தனர். அப்போது கயிலையிலிருந்து வந்த சிவ கணங்கள் அக்குதிரையின் ஆத்மாவையும் , குடை பிடிப்பவனது ஆத்மாவையும் தாங்கள் கொண்டு வந்த விமானத்தில் ஏற்றிக் கொண்டு கயிலைக்குச் சென்றனர். அதுபோல் தானும் கயிலை செல்ல இயலவில்லையே என்று வருந்திய சோழ மன்னனிடம் ஹரதத்தர், " அவ்விருவரும் கால் நடையாகவே சென்றதால் கயிலைக்குச் செல்ல முடிந்தது. நீயும் கால் நடையாகச் சென்றால் கயிலையை அடைவாய்" என்று அருளினார். அதன்படியே, சோழனும் மறுநாள் கால் நடையாகவே எழூர்களுக்கும் சென்று வந்தவுடன் விமானம் எறிக் கயிலையை அடைந்தான். அக்னியில் சமர்ப்பித்ததை அக்னீசுவரர் ஏற்றது: ஒரு சமயம் சிவலிங்க பூபதி அக்நீசுவரருக்காகப் பட்டு வஸ்திரம் ஒன்றை அனுப்பி வைத்து அதனைத் தனது ஆசாரியராகிய ஹரதத்தர் மூலம் சுவாமிக்குச் சேர்ப்பிக்குமாறு வேண்டினான். அந்த வஸ்திரத்தை ஹரதத்தர் தான் செய்த வேள்வியில் நெய்யில் நனைத்து ஈசுவரார்ப்பணமாகச் செய்து விட்டார். அதனைக் கேள்விப்பட்ட சிவலிங்க பூபதி, அந்த வஸ்திரம் சுவாமிக்குச் சார்த்தப்படாமல் அக்னிக்கு அளிக்கப்பட்டதே என்று மனம் வருந்தினான். சில தினங்களுக்குப் பின்னர் சிவலிங்கபூபதி கஞ்சனூர் வந்தபோது ஹரதத்தர் அவனை சுவாமி சன்னதிக்கு அழைத்துச் சென்று காட்டினார். " பூபதி, நீ அளித்த வஸ்திரத்தை சுவாமி ஏற்றுக் கொண்டுள்ளதைப் பார்" என்று காட்டினார். அந்த வஸ்திரம் சுவாமிக்குச் சார்த்தப்பட்டிருந்ததைக் கண்டு அதிசயித்த பூபதி, தன் அறியாமையை உணர்ந்து ஆசிரியப் பெருமானின் திருவடிகளை வணங்கி அருள் பெற்றான். பசுக் கொலை செய்தவனுக்கு இரங்கிப் பிராயச்சித்தம் அருளியது: கஞ்சனூரில் வாழ்ந்து வந்த தேவசன்மா என்ற பிராமணன் இரவு நேர இருட்டில் மாட்டுக் கொட்டகைக்குச் சென்று பசுக்கன்று இருப்பது தெரியாமல் அதன் மீது வைக்கோல் கட்டைப் போட்டு விட்டு இல்லம் திரும்பினான். மறுநாள் காலை அப்பசுங் கன்று வைக்கோல் பாரம் தாங்காமல் மூச்சு முட்டி இறந்திருந்தது தெரிய வந்தது. உள்ளூர் அந்தணர்கள், " பசுக்கொலைக்குப் பிராயச்சித்தமே கிடையாது" என்றார்கள். இதைக் கேட்டு மனம் உடைந்த தேவசன்மா , ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்ற போது, வாயில் படியில் தலை மோதியதால் வலி பொறுக்கமுடியாமல், " சிவ சிவ என்றான். நடந்ததை ஞான திருஷ்டியால் அறிந்த ஹரதத்தர், அவனைத் தேற்றி, " வரூந்தாதே, சிவ என்று ஒரு முறை சொன்னதும், பசுவைக் கொன்ற பாவம் தீர்ந்து விட்டது. அடுத்த முறை சிவ என்று சொன்னதால் நிச்சயமாக மோக்ஷம் கிடைக்கும்" என்று ஆறுதலளித்து அனுப்பினார். ஆனால் ஹரதத்தர் அதனை நிரூபிக்க வேண்டும் என்று ஊர்க் காரர்கள் கூறவே, ஹரதத்தரும் அதற்கு இசைந்து, " காவிரியில் நீராடிவிட்டு, ஒரு கைப்பிடி அருகம் புல்லோடு கோவிலுக்கு அவ்வந்தணர்களுடன் வருவாயாக" என்று தேவசன்மாவிடம் கூறினார். மறுநாள் காலை அக்னீசுவரர் சன்னதியை அனைவரும் அடைந்தனர். அப்போது அக்னீசுவரப் பெருமானைப் பாரத்து ஹரதத்தர் " ஒரு முறை சிவ என்றால் பசுக்கொலைப் பாதகம் தீரும் என்பதை நிரூபிக்க இங்குள்ள கல்லால் ஆன நந்தி இந்த அருகம் புல்லை யாவரும் காணும் படி உண்ண வேண்டும்" என்று பிரார்த்தித்தார். உடனே, அருகிலிருந்த கல் நந்தி உயிர்பெற்று அப்புல்லைத் தின்றது. உள்ளூர் வாசிகள் ஹரதத்தரை வணங்கிப் பிழை பொறுக்க வேண்டினர். தண்டனையைத் தான் ஏற்றது : ஒரு சமயம் அக்னீசுவரர் ஆலய அர்த்தஜாம பூஜைக்கு வராத கணிகை ஒருவளை ஆலய அதிகாரிகள் வெய்யிலில் நிற்க வைத்துத் தண்டித்ததைப் பார்த்த ஹரதத்தர், பல தவறுகள் செய்த ஆலய அதிகாரிகளும் இவ்விதம் தண்டனைக்குரியவர்கள் தானே என்று நினைத்துத் தாமும் வெய்யிலில் புரண்டார். அப்போது அங்கு வந்த ஒரு சிவனடியார் அதன் காரணம் வினவ, இக் கணிகையை அதிகாரிகள் தண்டிக்கின்றார்கள் . கோயில் சொத்தை அபகரித்துள்ள இவர்களை அக்நீசுவரரே தண்டிக்க வேண்டும். அவர்களுக்கான தண்டனையை நானே ஏற்றுக் கொண்டேன்." என்றார். இதைக் கேட்டுப் புன்னகைத்துக் கொண்டே, வந்த சிவனடியார் மறைந்து போனார். இதனைக் கண்ட அதிகாரிகள் ஹரதத்தரிடம் மன்னிப்பு வேண்டினர். நாய்க் குட்டி வடிவில் சிவனைக் கண்டது: ஒரு நாள் ஹரதத்தரது சிவபூஜையைக் காண இருவர் வந்தனர். சிவலிங்கத்திற்கு சங்கால் அபிஷேகம் செய்யத் துவங்கும் போது ஒரு நாய்க் குட்டி அருகில் வரவே, ஹரதத்தர் அச்சங்கிலிருந்த தீர்த்தத்தைச் சிறிது அந்த நாய்க்கு அளித்தார். இப்படிச் செய்யலாமா என்று வந்தவர்கள் வினவ, அதற்கு ஹரதத்தர், " இப்போது நாய் வடிவில் வந்தது சிவ பெருமான். " என்றார். அந் நாய் மீண்டும் அங்கு வந்தது. அதன் மீது ஹரதத்தர் தீர்த்தத்தைத் தெளிக்க அது சிவ லிங்கமாக மாறியது. அதனை வந்தவர்களிடம் கொடுத்து நித்திய பூஜை செய்து வருமாறு அருளினார். புலையன் வடிவில் கண்ட காட்சி: ஒரு நாள் காவிரிக்கு நீராடச் சென்ற ஹரதத்தர் அங்கு ஓர் புலையனும் புலைச்சியும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார் ஹரதத்தர். தான் செய்த பாவத்தால் புலைச்சியானதாகக் கூறி, அப்பாவம் நீங்க வேண்டிக் காவிரியில் நீராடப் போவதாகக் கூறியவளைப் புலையன் தடுத்து நிறுத்திவிட்டு, " இக்காவிரியாற்றிலுள்ள மணல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பதை அறிவாய். நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ இலிங்கங்களை மிதிக்க நேரிடும். இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்தபடியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் " என்றான். இதனைக் கண்ட ஹரதத்தர் , பார்க்கும் யாவும் சிவமயமாகக் காணும் இவனன்றோ சிவஞானி! என்று எண்ணி அப்புலையனை நமஸ்கரித்து அவனது மிதியடியைத் தலை மீது வைத்துக் கொண்டார். அப்புலைய வடிவில் வந்தவர்கள் அக்நீசுவரரும் கற்பகாம்பிகையும் ஆவர். " ஹரதத்தா, உனக்குத் திருவடி தீக்ஷை செய்யவே இப்படித் திருவிளையாடல் செய்தோம் " எனத் திருவாய் மலர்ந்து அருளினான் பெருமான். நாய் உண்டது பிரசாதமானது: ஹரதத்தரது மனைவி கமலாக்ஷி, அடுக்களையில் உணவு சமைத்து வைத்திருந்தபோது ஒரு நாய் அங்கு புகுந்து அதில் ஒரு கவளத்தை உண்டது. புலையன் சொன்னதுபோல் காவிரி மணல் யாவும் சிவன் என்றால் நாயும் சிவன் தானே! அப்படியானால் நாய் உண்டதை சிவன் உண்டதாகக் கருதி அதனைப் பிரசாதமாக ஏற்று உண்பது தானே முறை எனக் கருதினார் ஹரதத்தர். அப்போது அந்த நாய் சிவனாகக் காட்சி தந்து மறைந்ததை இருவரும் கண்டனர். சுவாமி அப்போது அசரீரியாக, " முன்பு உனக்குத் திருவடி தீக்ஷை தந்தோம். இப்போது குருவாகிய யாம் உண்ட சேஷத்தை உனக்குத் தந்தோம் " என்று அருளினார். ஆனந்தக் கூத்தாடிய ஹரதத்தர் திருவருளை வியந்தவராக நாய் உண்ட சேஷத்தை உண்டு,வீட்டிலுள்ளோரையும் உண்ணச் செய்தார். வீட்டிலிருந்தோர் செயல்கள்: ஹரதத்தரின் தாயார் ஒரு சமயம் வீட்டு வாசலில் நெல்லை உலற வைத்திருந்தபோது ஒரு காளை மாடு அங்கு வந்து அந்த நெல்லைச் சிறிது தின்றது. மிஞ்சியிருந்த நெல்லை அங்கு வந்த ஹரதத்தர் குவித்து வைத்து, அக்காளை மாடு உண்ணுமாறு உதவினார். இதைப் பார்த்துக் கொண்டே வந்த ஹரதத்தரின் தாயார் நெல்லை மாடு தின்று விட்டதே என்று எண்ணி அதைக் கோலால் அடித்து விரட்டினாள். அப்போது அங்கு வந்த ஹரதத்தர், " காளை மாடு ஈசுவரனின் வாகனம் அல்லவா? இப்படி வாயில்லா ஜீவனை அடிக்கலாமா? " என்றார். சிறுது நேரத்தில் அவர் வீட்டு வாயிலில் சிவலிங்க பூபதி கொடுத்து அனுப்பிய நெல் மூட்டைகள் வந்து இறங்கின. வண்டிக்காரர் ஹரதத்தரிடம், " பூபதி தங்களிடம் நாற்பது கோட்டை நெல்லைக் கொடுத்து வரச் சொல்லியிருந்தார். வரும் வழியில் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட இருபது மூட்டைகள் போக மீதி இருப்பதே மிஞ்சின" என்றார். அவர் விடைபெற்றுச் சென்ற பிறகு ஹரதத்தர், தாயாரிடம் " அம்மா, நீ உலர்த்திய நெல்லில் பாதியைக் காளை தின்றது என்று அதை அடித்தாயல்லவா? நமக்கும் பாதி நெல்லே வந்து சேர்ந்தது " என்றார். அரிசியைத் தின்ற நாயை மனைவி வெட்டியது: ஒருநாள் ஹரதத்தரின் மனைவி, அரிசியை முற்றத்தில் வைத்து விட்டு அடுக்களையில் வேலையாக இருந்தாள் . அப்போது அங்கு வந்த ஒரு நாய் அந்த அரிசியை உண்ணத் துவங்கியது. அதைக் கண்டு கோபம்கொண்ட கமலாக்ஷி, அந்த நாயை விரட்டுவதற்காக அரிவாள் மனையை அதன் மீது வீசி எறிந்தாள் . நாயும் வெட்டுப்பட்டு இறந்தது. அதக் கேட்ட ஹரதத்தர் அங்குவந்து அந்த நாய்க்கு விபூதி பூசி விட்டு அதன் காதில் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதினார். அதனால் அந் நாய் நற்கதி பெற்று விமானமேறி தேவலோகம் அடைந்தது. அக்நீசுவரரே ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்தது: தனது தாயார் காளை மாட்டைக் கோலால் அடித்து விரட்டிய பாவத்தையும்,மனைவியார் நாயைக் கொன்ற பாவத்தையும் தீர்ப்பதற்காக ஒரு ஸ்லோகம் எழுதத் தொடங்கினார். பிராயச்சித்தம் என்னவென்று விளங்காததால் இரண்டே வரிகள் எழுதித் தொடங்கப்பெற்ற ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்யாமல் காவிரிக்கு நீராடச் சென்றார். வீட்டிற்குத் திரும்பியதும் தான் எழுதிய ஓலைச் சுவடியைக் கொண்டுவந்து பிரித்துப் பார்த்தால் அந்த ஸ்லோகத்தின் மீதி இரண்டு வரிகள் எழுதப்பட்டிருந்தன. பஞ்சட்சர ஜபம் செய்வதே பிராயச்சித்தம் என்ற பொருள் உடையவை அவ்வரிகள். இதை யார் எழுதியது என்று மனைவியிடம் கேட்டபோது அதற்கு அவர், " தாங்கள் தானே திரும்பி வந்து எழுதி வைத்து விட்டுக் காவிரிக்குச் சென்றீர்கள்?" என்றார். தம் உருவில் வந்து எழுதியது அக்நீசுவரரே என்று ஹரதத்தருக்கு அப்போதுதான் புலப்பட்டது. மாசிலாமணீசுவரர் இடையன் உருவில் துணை வந்தது: ஒருசமயம் ஹரதத்தர் திருவாவடுதுறைக்குச் சென்று மாசிலாமணீசுவரரைத் தரிசித்து விட்டுத் திரும்புகையில் இருட்டி விட்டது. கரிய மேகங்கள் சூழ்ந்தபடியால் வழியும் தெளிவாகத் தெரியாததால் சுவாமியை தியானித்தார். அப்போது கையில் விளக்கேந்தியவாறு ஒரு பசு மேய்க்கும் இடையன் ஒருவன் அவரிடம் வந்து, " நான் இவ்வூரில் வசிக்கும் இடையன். என் பெயர் மாசிலாமணி. எனது பசுவைத் தேடிக் கொண்டு இங்கு வந்தேன்.தாங்கள் மாபெரும் சிவஞானி. நான் உங்களுக்குத் துணையாக வருகிறேன்" என்ரூ கூறி விளக்கை ஏந்தியபடியே அவருக்கு முன் நடந்தான். கஞ்சனூர் வந்ததும் அவரிடம் அந்த ஆயன் விடை பெற்றுக் கொண்ட போது, ஹரதத்தர் தன் வீட்டிலிருந்த சோற்றையும் பாகற்காய் குழம்பையும் அவனிடம் தந்து உண்ணச் சொன்னார். அதற்கு அவன் அதை ஏற்றுக்கொண்டு தனது ஊர் திரும்பிய பிறகு உண்ணுவதாகக் கூறிவிட்டு விடை பெற்றுச் சென்றான். இடையன் வடிவில் வந்த மாசிலாமணீசுவரர், திருவாவடுதுறை யிலுள்ள தனது ஆலயத்திற்குள் எழுந்தருளித் தாம் கொண்டு வந்த சோற்றையும் பாகற்காய் குழம்பையும் சன்னதியில் சிதறிவிட்டு மறைந்தருளினார். மறுநாள் காலையில் அர்ச்சகர் இவ்வாறு சிதறிக் கிடப்பனவற்றைக் கண்டு பதறினார். அதிகாரிகள், ஆலய பரிசாரகர்களை அழைத்து உண்மையைக் கூறாவிட்டால் சவுக்கடி விழும் என்றனர். அப்போது பெருமான் அசரீரியாக, " நேற்று இரவு அர்த்த ஜாம தரிசனம் செய்து விட்டுக் கஞ்சனூர் திரும்பிய ஹரதத்தனோடு யாமே துணையாகச் சென்று அங்கு அவன் தந்தவற்றைப் பெற்றுக் கொண்டு வந்து இங்கு சிதறுவித்தோம்" என்றருளினார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஹரதத்தர் , திருவருளை நினைந்து ஆனந்த பரவசம் அடைந்தார். தைப்பூச மகிமை உரைத்தது: திரியம்பகர் என்பவர் ஒரு யதியின் ஆசிரமமடைந்து அந்த யதியின் விருப்பப்படி காசி யாத்திரை சென்றார். அப்போது அவருக்குப் பணிவிடை செய்து வந்த ஒருத்தி, திரியம்பகர் திரும்பி வருவதை யோகி அறிந்து விட்டார் என்பதை உணர்ந்தாள். மணலில் அவர் எழுதுவது யாருக்கும் புரியாதபோது அவள், த்ரியம்பகருக்குச் சொல்லவேண்டிய ரகசியத்தை எழுதியிருக்கிறார் என்றாள். தான் வந்த போது யதியின் ஆவி பிரிந்ததை அறிந்த திரியம்பகர், குருவுக்குக் கிரியைகள் செய்து முடித்தார். அந்திம காலத்தில் யதி எழுதியது என்ன என்று அவர் அப்பெண்ணைக் கேட்டபோது ஒரு மாதம் கழித்துச் சொல்வேன் என்று கூறி அதற்குள் ஆசிரம சொத்துக்களைக் கைப்பற்றலானாள். பின்னர் கேட்டபோது "யதி பஞ்சாக்ஷரம் எழுதினார் அதுவே ரகசியம்" என்று கூறினாள். அவளை விரட்டிய திரியம்பகர் அவளது தொடர்பால் ஏற்பட்ட பாவம் நீங்கத் தல யாத்திரை செய்து வரும்போது திருவிடைமருதூரை அடைந்தார். வழியில் கஞ்சனூரை அடைந்து ஹரதத்தரை வணங்கினார் . ஹரதத்தரும் அவருக்குத் தனது மனையில் உணவளித்தார். பெண் தொடர்பு கொண்டவரோடு ஹரதத்தர் எதற்காக உணவருந்த வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் என்று கேட்டபோது, அவர்களிடம் ஹரதத்தர்," பாவம் செய்ததது என்னவோ உண்மை தான். ஆனால் எப்போது இந்தத் தலத்திற்கு வந்து காவிரியில் தைப்பூச தீர்த்தவாரியில் நீராடினாரோ அப்போதே அவரது பாவங்கள் நீங்கப்பெற்று விட்டார்" என்றார். அந்தப் பதிலைக் கேட்டவர்கள் திருப்தி அடையாததால் அவர்களுடன் ஹரதத்தர் மகாலிங்க சுவாமியின் சன்னதியை அடைந்து பிரார்த்தித்தபோது, சுவாமி அசரீரியாக, " தைப்பூச நீராடல் எல்லாப் பாவங்களையும் நீக்கும். இது சத்தியம். இந்தத் துறவியின் பாவமும் நீங்கி விட்டது" என்று மும்முறை ஒலித்தருளினார். மனம் மகிழ்ந்த திரியம்பகரும் ஹரதத்தரிடம் விடை பெற்றுக் கொண்டு தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். முடவனான தங்கை மகனைக் காசிக்கு அனுப்பியது: ஹரதத்தரின் தங்கை மகன் கங்காதரர் என்பவர் ஒரு பிறவி முடவர் . அவருக்குக் காசிக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் ஹரதத்தர் அவரைக் கஞ்சனூரிலுள்ள பிரம தீர்த்தத்தில் மூழ்கச் செய்து அதன் பலனாகக் காசியில் கரை ஏறுமாறு செய்தார். மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த கங்காதரர், காசியில் விஸ்வநாதரையும் விசாலாக்ஷியையும் வழிபட்டு வந்தபோது ஆலயத்தின் வெளியில் ஒரு தனவந்தரையும் அவரது மனைவியையும் கண்டார். தான் கஞ்சனூரிலிருந்து வருவதாகக் கூறியதும், அத் தனவந்தர், ஹரதத்தர் தனது நண்பர் என்றும் அவரை மிகவும் விசாரித்ததாகக் கூறும் படியும் சொல்லிவிட்டுகே கங்காதரரை மணிகர்ணிகையில் மூழ்கச் சொன்னார். அவரும் அப்படியே செய்ய, கஞ்சனூரில் தற்போது மனியாங் குளம் என்று வழங்கப்படும் மணி கர்ணிகா குளத்தில் எழச் செய்தருளினார். நடந்தவற்றை அறிந்த ஹரதத்தர், மெய் சிலிர்த்து, " கங்காதரா, அவர்கள் இருவரும் விசுவநாதரும் விசாலாட்சியும் தான். அவர் என்னை நண்பன் என்று சொன்னதற்கு எத்தனை புண்ணியம் செய்தேனோ" என்று ஆனந்தப் பட்டார். பின்னர் கங்காதரர் ஹரதத்தரிடம் எல்லா சாஸ்திரங்களையும் கற்றார். ஹரதத்தர் இயற்றிய சுருதி சூக்த மாலைக்கு சிறந்த உரையையும் எழுதினர். எல்லோரும் அவரை, " இளைய ஹரதத்தர்" என்று பாராட்டினர். ஹரதத்தர் கயிலாயம் சென்றது: ரிஷபாரூடராகக் கயிலாசநாதனான பரமேசுவரன் பார்வதி தேவியோடு ஹரதத்தருக்குக் காட்சி அளித்துக் கயிலாச பதம் தருவதாகவும் வேறு வரம் வேண்டினால் கேட்பாயாக என்றும் அருளினார். அப்போது ஹரதத்தர், " சுவாமி, அடியேனது அண்டை வீட்டார் பதினான்கு பேரும் கைலாச பதம் பெற வேண்டும். அதோடு, அடியேன் உண்ட சே ஷத்தைச் சாப்பிட்டு வந்த நாய்க்கும் அப்பதம் கிடைக்க அருள வேண்டும்" என்று பிரார்த்தித்தார். இறைவனும் அப்படியே வரம் தந்தருளினான். கயிலையில் இருந்து விமானம் வந்தது அதில் ஹரதத்தரும், அண்டை வீட்டாரும் விநாயக பூஜை செய்து வந்த ஒரு கிழவியும், சேஷத்தை உண்ட நாயும் ஏறிக் கயிலாயத்தை அடைந்தனர். ஹரதத்தர் அருளிய நூல்கள்: சிவபரத்துவ சுலோகங்கள்; சுலோக பஞ்சகம்; தச சுலோகி; ஹரி ஹர தார தம்மியம் சுருதி சூக்த மாலை என்பன. துணை நின்ற நூல்: " ஹரதத்தர் வரலாறு " கஞ்சனூர் சிவபூசைச் செல்வர் இரா. கலியபெருமாள் பத்தர் அவர்களின் மணி விழா மலர்.

519 views0 comments
bottom of page