வைப்பூர் என்ற ஊரின் பெயரை அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களைத்தவிர மற்றவர்கள் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் சரித்திரம் வாசித்தவர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். மயிலாடுதுறையிலிருந்து ஆண்டிப்பந்தல் வழியாகத் திருவாரூர் சென்றால் கங்களாஞ்சேரி என்ற ஊர் வரும். அங்கிருந்து கிழக்கே நாகூர் செல்லும் வழியில்தான் வைப்பூர் என்ற ஊர் இருக்கிறது. அதிகப் போக்குவரத்து இல்லாத அமைதியான சாலை. வழி நெடுகிலும் கிராமங்களே உள்ளன.
இந்த சாலையில் சென்றால் பல சிவத்தலங்களைத் தரிசிக்கலாம். அவற்றில் முக்கியமானது, விற்குடி ஸ்ரீ வீரட்டானேசுவரர் ஆலயம். இது அஷ்ட வீரட்டானங்களில் ஜலந்தராசுர வதம் செய்த வீரச் செயல் நடந்த தலம். சம்பந்தரின் பதிகம் பெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கருங்கல் திருப்பணி செய்திருக்கிறார்கள்.
விற்குடியைத் தரிசித்த பிறகு மீண்டும் நாகூர் சாலைக்கு வந்து மீண்டும் கிழக்கு நோக்கிப் பயணிக்கிறோம். வழியில், சனைச்சரன் சிவ வழிபாடு செய்த ஈசுவர வாசல் வருகிறது. மூங்கில் மரங்கள் சூழப்பெற்ற ரம்மியமான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் சிறு வாய்க்கால். மூங்கில் பாலம் மூலம் கடக்க வேண்டும். சிறியதும் பழமையானதுமான இக்கோயில் உடனடியாகத் திருப்பணி செய்யப்பெற்றுக் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அர்ச்சகர் வீடு அருகிலேயே உள்ளது.
பின்னர் பயணம் தொடர்கிறது. வைப்பூர் கடைத்தெருவை அடைந்ததும் இடப்புறம் திரும்பினால் தெருக்கோடியில் ஆலயம் அமைந்துள்ளது. அதற்கு அப்பால் வயல்களே உள்ளன. கோயிலுக்கு எதிரில் அழகான திருக்குளமும் ஸ்தல விருக்ஷ மேடையும் இருக்கின்றன. நாம் முதல் முறையாக இக்கோயிலைத் தரிசித்தபோது கண்கள் குளமாயின. காணக் கூடாத காட்சிகள். சுற்று மதில் இல்லாததால் உள்ளூரில் சிலர் பிராகாரத்தை மிகவும் அசுத்தப் படுத்தியிருந்தனர். மூக்கைப் பிடித்துக் கொண்டே வலம் வர வேண்டியிருந்தது.
அரைகுறையாகத் திருப்பணி நடை பெற்றுக் கை விடப்பட்டதோடு, நடந்து வந்த ஒரு கால பூஜையும் நின்று போயிருந்தது. கதவுகளே இல்லாத சன்னதிகள். பிரதிஷ்டை செய்யப்படாத பரிவார மூர்த்திகள், வேரூன்றிப் பிளவு பட்டிருக்கும் விமானங்கள் ஆகியவற்றைப் பார்த்தால் கல் மனமும் கரைந்தே தீரும். உள்ளூர்வாசிகள் ஓரிருவரே தினமும் விளக்கேற்றி வந்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் சேக்கிழார் பெருமானது வாக்கில் வந்துள்ள இவ்வூருக்கு இந்த நிலை வரலாமா? சைவ சமய ஆர்வலர்கள் எங்கே போயினர்? பெரிய ஊர்களில் கயிலாய வாத்திய முழக்கமும் முற்றோதுதலும் செய்து விட்டால் போதும் என்று நினைக்கிறார்களா? இப்பழமை வாய்ந்த தலங்களைப் பற்றி யார்தான் கவலைப் படப் போகிறார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருந்தது.
பிறர் என்ன செய்கிறார்கள் என்று வினா எழுப்புவதை விட, நாம் நம்மால் முடிந்த அளவில் என்ன செய்யப்போகிறோம் என்று யோசித்ததில் நமது அமைப்புக்கு வழி காட்டும் நல்லன்பர் ஒருவரின் பெருந்துணை இறையருள் காரணமாக வெளிப்பட்டது. திருப்பணிகள் துவங்கலாயின. அதன் விவரங்களை அறியும் முன்பாக இத் தலப் பெருமையையும் இங்கு அறிந்து கொள்வோமாக.
தலப் பெருமை
வைப்பூரில் தாமன் என்பவன் இருந்தான். அவனுக்கு ஏழு புதல்விகள். அவர்களில் மூத்தவளைத் தனது மருமகனுக்கு வாழ்க்கைத் துணைவியாகத் தருவதாக வாக்களித்திருந்தான். ஆனால் ஆசை காரணமாகத் தன வந்தன் ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டான்.இப்படியே மற்ற ஐந்து பெண்களையும் தனவந்தர்களுக்கே மணம் செய்து கொடுத்தான். ஏழாவது பெண் ஒருத்திக்கே மணம் செய்ய வேண்டியிருந்தது. தன்னையும் மற்ற சகோதரிகளுக்கு நேர்ந்தது போலத் தந்தை வேறு ஒரு வரனுக்குக் கொடுத்துவிட்டால் வாக்கு மீறிய பெரும் பழி வந்து விடுமே என்று அஞ்சித் தனது முறைப் பையனையே மணக்கத் துணிந்தாள் அப்பெண்.
துணை நின்ற பெருங்கருணை
அக்கன்னியும் அவளது முறைப்பையனும் வைப்பூரை விட்டுக் கிளம்பினர். இரவு நேரம் வந்து விட்டபடியால் திருமருகல் என்ற ஊரில் உள்ள மாணிக்க வண்ணரது ஆலயத்தை ஒட்டியிருந்த மடத்தில் உறங்கினர். அப்போது அவ்வணிகப் பிள்ளையை ஒரு பாம்பு கடித்து விட்டதால் விஷம் தலைக்கேறி உடனே அவன் மாண்டு விட்டான்.
துணை யாரும் இல்லாத அந்த அபலைப்பெண் மருகல் பெருமானது திருக்கோயிலை நோக்கிய வண்ணம் கதறலானாள். கடல் நஞ்சை உண்ட பெருமானே, மாலயனாலும் காண முடியாத கடவுளே, சாம்பலாக ஆகுமாறு நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்த பின்னர், அவனது மனையாளாகிய ரதி தேவி வேண்டியதற்கு இரக்கப்பட்டுக் காமனை மீண்டும் உயிர்ப்பித்த கண்ணுதற் பெருமானே. அந்தணச் சிறுவனது உயிரைக் கொள்ள வந்த காலனைக் காலால் கடந்து அப்பாலகனுக்கு அருளிய பன்னகாபரணா, இவ்வணிகனது உடலில் ஏறிய விஷம் இறங்குமாறு காத்து அருளுவாய் என்று கண்ணீர் விட்டுக் கதறினாள் அப்பெண்.
சிவனருள் அப்பெண்ணுக்குச் சித்திக்கும் பேறு அப்போது வாய்ந்தது. சிவத் தல யாத்திரையாக அங்கு எழுந்தருளிய திருஞான சம்பந்தப்பெருமானது திருச் செவிகளில் அப்பெண்ணின் அழு குரல் கேட்கவே, மனமிரங்கிய சீகாழி வள்ளல், அவளை நோக்கியவராகப் , "பயப்படேல் நீ" என்று அபயம் தந்தருளினார். அவளுக்கு நேர்ந்ததை அறிந்த ஞான சம்பந்தர், அப்பெண்ணுக்குக் கருணை காட்டியவராகப் , பாம்பின் விஷம் நீங்கி வணிகன் மீண்டும் உயிர் பெறுமாறு மருகல் பெருமானை வேண்டியபடி, "சடையாய் எனுமால்" எனத் துவங்கும் தேவாரத் திருப்பதிகம் பாடியருளினார்.
பெருமானே, இரவும் பகலும் கண் துஞ்சாது உன்னையே வழிபடும் இவ்வபலைக்குத் துயரம் ஏற்படுவது தகுமோ என்று பாடியருளினார். பதிகம் நிறைவு பெற்றதும் வணிகன் விஷம் நீங்கி உயிர் பெற்று எழுந்தான். இருவருமாகக் காழிப் பிள்ளையாரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அவ்விருவருக்கும் முறைப்படி விவாகம் செய்து வைத்தருளினார் சம்பந்தர். திருமருகல் ஆலயத்தில் கோடைக்கால பிரமோற்சவத்தில் ஒரு நாள் செட்டிப் பெண் விவாக ஐதீக நிகழ்ச்சி, கோயிலின் பிராகாரத்திலுள்ள வன்னி மர மேடைக்கருகில் விமரிசையாக ஆண்டு தோறும் நடை பெறுகிறது.
வைப்பூர் பெண்ணுக்கு முதலில் சோதனை ஏற்பட்டாலும், அவளது தளராத சிவபக்தியின் காரணமாக சம்பந்தரின் வருகையும் அற்புதமும் நடை பெற்று, அவளுக்குப் பெருங்கருணை கிடைக்க ஏதுவாயிற்று. இப்போது சொல்லுங்கள். வைப்பூர் சிவாலயம் சிதைவடைவது தகுமோ?
இதனைக் காக்க வேண்டும் என்று திருவருள் உணர்த்தியது. முன்னர் நடை பெற்ற திருப்பணியின்போது விமான வேர்கள் முழுமையாக எடுக்கப்படாததால் அப்பகுதியில் மீண்டும் ராட்சச வேர்களுடன் மரங்கள் முளைத்து விட்டன. அவற்றை முழுமையாகக் களையாமல் மேலெழுந்தவாரியாகப் பூசி மூடி விட்டால் திரும்பவும் அவ்விடம் மரம் முளைக்கவே செய்யும். ஆகவே, மிகக் கவனத்துடன் பாதிக்கப்பட்ட பகுதியைப் பிரித்துத் தடித்த வேர்கள் அகற்றப்பட்டன. சுவாமி அம்பாள் சன்னதிகளில் இவ்வாறு நடந்த பின்னர் உள்ளூர் வாசிகளின் வேண்டுகோளின் படி, விநாயகர், முருகன் சன்னதிகளில் தளம் போடப்பெற்றது. ஆலயத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப் பட்டது.
அருகிலுள்ள திருப்பயற்றூர் என்னும் தேவாரத் தல அர்ச்சகர் தினமும்வந்து பூஜை செய்கிறார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை உள்ளூர் வாசிகள் பெரும் முயற்சி செய்கிறார்கள்.
திருப்பணியும் கும்பாபிஷேகமும் நடந்து விட்டால் மட்டும் போதாது. தினசரி பூஜைகள் முறைப்படி செய்விக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்கள் தரிசிப்பதோடு, இந்த ஆலயத்தைப் பராமரிக்கத் தங்களால் ஆன உதவிகளைச் செய்வதன் மூலம் சிவ புண்ணியம் பெறலாம். அதுவே, நம் குடி முழுவதையும் காப்பதோடு, நமது சமயத்தையும் காத்து நமது சந்ததிகளுக்கு நல் வழி காட்டும்.
Article Courtesy:
திரு சேகர் வெங்கட்ராமன்,
சென்னை.
பட உதவி- சைவம்.வலைத்தளம்
Thanks to Smt. Malathi Jayaraman for sharing this article.