top of page

ராகு கேது பெயர்ச்சி!


நவக்கிரக மண்டபத்தில், ராகுவும், கேதுவும் தனித்தனியாக இருப்பதே மரபு. ஆனால், இரண்டும் இணைந்து, ஒரே சன்னிதியில் காட்சி தருவதை, திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் (பாம்புரநாதர்) கோவிலில், காணலாம். ஜூலை 27ல், ராகு, சிம்மத்திலிருந்து, கடகத்திற்கும், கேது, கும்பத்திலிருந்து, மகரத்திற்கும் மாறுகின்றனர். இந்த பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசியினர், ஒருங்கிணைந்த ராகு - கேதுவை தரிசித்து வரலாம்.

விநாயகர், கைலாயத்தில் தன் தந்தை சிவபெருமானை வணங்கிய போது, அவரது கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் விநாயகர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. இதனால், கோபம் கொண்ட சிவன், நாக இனம் முழுவதும், தன் சக்தியை இழக்க சாபமிட்டார். தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக, மற்றவர்களை தண்டிக்கலாகாது; தவறு செய்த பாம்பை மன்னிக்கும்படி சிவனை வேண்டின, பாம்புகளும், ராகு மற்றும் கேதுவும்!

பூலோகத்தில், தவமிருந்து சாப விமோசனம் பெறலாம் என அருளினார், சிவபெருமான். அதன்படி, பாம்புகள் எல்லாம் ஓரிடத்தில் கூடி தவம் செய்தன. பாம்புகள் கூடிய ஊர் என்பதால், 'திருப்பாம்புரம்' ஆயிற்று. சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன், இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் விஷத்தன்மை பெற்றதால், இங்கு வந்து வழிபடுவோர், தாங்கள் இழந்ததை மீண்டும் பெறுவர்.

கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர், கீழப்பெரும்பள்ளம், திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோவில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற தலம் இது. எனவே, இங்கு சர்ப்பதோஷம் மட்டுமின்றி, சர்வ தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். ஆதிசேஷனுக்கு இங்கு உற்சவர் விக்ரகம் உள்ளது.

மற்ற கோவில்களில் ராகு, கேது தனியாக இருக்கும்; இங்கு ஒரே சரீரமாக, பின்னிப்பிணைந்து இருப்பதைக் காணலாம். ஜாதகத்தில் காள சர்ப்ப தோஷம், 18 ஆண்டு ராகு தசை, ஏழு ஆண்டு கேது தசை, களத்திரதோஷம் எனப்படும் வாழ்க்கை துணை தோஷம், புத்திர தோஷம் நீங்கவும், கனவில் பாம்பு வருதல், பாம்பை கொன்றிருந்தால் மற்றும் கடன் தொல்லைகள் இருந்தால், இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்வர்.

கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில், 20 கி.மீ., தூரத்திலுள்ள, கற்கத்தி கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில், 3 கி.மீ., தூரம் சென்றால், திருப்பாம்புரத்தை அடையலாம்.

Source:

[Re-posting it from Amritha Vahini google group]

Posted by Sri. Ramakrishnan K S in the Amritha Vahini google group

117 views0 comments
bottom of page