Sethalapati Temple
- Thanjavur Paramapara
- Aug 12, 2017
- 6 min read
உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*சிவ தல தொடர்.76.*
*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
*திருத்திலதைப்பதி.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.............)
*மதிமுக்தீஸ்வரர் கோவில், திருத்திலதைப்பதி.*
(தற்போது செதலபதி என்று வழங்கப்பட்டு வருகிறது.)
*இறைவன்:* மதிமுக்தீஸ்வரர்.
*இறைவி:*
பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி.
*தல விருட்சம்:* மந்தாரம் மரம்.
*தல தீபாவளி:* சந்திர தீர்த்தம்.
*அரசிலாறு வழிபட்டோர்:*
இராமர், இலட்சுமணன், சூரியன், சந்திரன், யானை, சிங்கம் முதலியன.
சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் இத்தலம் ஐம்பத்து எட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இருப்பிடம்:*
மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் இருபத்தைந்து கி.மி. தொலைவில் இருக்கும் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் அமைந்து இருக்கிறது.
பூந்தோட்டதில் இருந்து சுமார் இரண்டு கி.மி.-ல் கூத்தனூர் சரஸ்வதி கோவில் வரும். இதன் அருகாமையில் இருக்கிறது.
*ஆலய முகவரி:*
அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்,
செதலபதி,
பூந்தோட்டம் அஞ்சல்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
PIN - 609 503.
*ஆலய பூஜை நேரம்:*
காலை 7.00 மணி முதல் பகல் 12-45 மணி வரையிலும்,
மாலை 4.00 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்
*கோவில் அமைப்பு:*
கோவிலுக்குள் நாம் நுழையும் முன்பு, கிழக்கு நோக்கிய இரும்புக் கம்பிகளாலான கதவையுடைய முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்திருப்பதை முதலில் கண்டோம்.
ஆலயப் பிரவேசம் செய்யச் செல்கையில் முதலில் நம் கண்களுக்கு இராஜ கோபுரம் தெரிய, அக்கோபுரத்தைத் தரிசனம் செய்வது வழக்கம்.
இங்கே இராஜகோபுரம் இல்லாததால், ஆலய வாயிற்கதவு முதலில் தென்படவே, *சிவ சிவ சிவ சிவ,* எனக்கூறி உள் நடந்தோம்.
உள்ளே நுழைந்ததும் கொடிமரத்தை வீழ்ந்து வணங்கித் துதித்தோம்.
பின், நந்தியாரின் முன் வந்து நின்று வணங்கி, ஆலயப்பிரவேசம் செய்ய அவரிடம் அனுமதி வேண்டி நம் வருகையினைப் பதிவு செய்து மேல் நடந்தோம்.
உள்வாயிலைக் கடந்து முன் மண்டபத்தை அடைந்த போது, நேரே மூலவர் சந்நிதிக்கு வந்து தரிசனம் செய்து மனமுருகப் பிரார்த்தித்து அவனருளையும், அவன் வணக்கத்திற்குப் பின் கிடைக்கப்பெற்ற வெள்ளியவிபூதியுடன் வெளிவந்தோம்.
வெளிவந்ததும் வலதுபுறமாக அம்பாள் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருக்க, உடனடியாக தரிசனத்துக்கு பரபரத்து விரைந்தோம்.
சுவாமியின் தரிசனருள் எப்படிக் கிடைத்ததோ? அதுபோலவே அம்மையின் தரிசனமும் மனதிற்கு திருப்தியான மன நிறைவுடன் அமைந்தது.
பிராகார வலம் வருகையில் விநாயகர், இராமர், இலக்குமணர் திருமேனிகள். அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரிய சந்திரர் ஆகியோர் காட்சி தர தொடர்ச்சியாக அனைவரையும் வணங்கி நகர்ந்து வலம் தொடர்ந்தோம்.
கோஷ்டத்தில் வருகையில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை இருக்க வழக்கமான நம் கைதொழல், இப்போதும் அப்போது போல வணங்குதலை கடைபிடித்தோம்.
இங்கு நாங்கள் கண்ட தட்சிணாமூர்த்தி வித்தியாசமான கோலத்துடன் காணப்பட்டார்.
காலால் அசுரனை மிதித்தபடியும், தன் இரண்டு பக்கமும் அணில்கள் சூழ்ந்தபடியும், சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்வது போலானதானக் காட்சியையும் தந்து கொண்டிருக்கிறார்.
இவரை வணங்கும் தன்மையை முறையுடன் வணங்கி விடைபெற்று வெளிவந்தோம்.
*தல அருமை:*
ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், வருணன், வாயு ஆகியோர் தவிர ரம்பா, ஊர்வசி, மேனகா என்று எல்லோரும் கூடியிருந்தனர்.
ஈசனும், அற்புதமாய் நடனம் ஆடிவிட்டு, பார்வதியுடன் எல்லோருக்கும் திருவருள் புரிந்தார். அச்சமயம் வாயுதேவன் சந்தோஷ மிகுதியால் சுழற்காற்றாக வீசினான்.
அதில் ஊர்வசியின் ஆடை சற்றே விலக, அருகில் நின்று கொண்டிருந்த பிரம்மா அதைப் பார்த்து காமமுற்றார்.
ஈசன் அதைக்கண்டு பிரம்மாவின் மேல் கோபமடைந்து பூலோகத்தில் பிறந்து உழலும்படி சாபமிட்டார்.
பின் பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மாவை திருத்திலதைப்பதியில் சிவவழிபாடு செய்துவரும் படி கட்டளையிட்டு நேரம் வரும்போது காட்சியளித்து சாபம் நீக்குவேன் என்றும் வரம் அளித்தார்.
பிரம்மாவும் திருத்திலதைப்பதி வந்து, தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார்.
சிவன் தடுத்தும் கோளாமல் தனது தந்தை நடத்திய யாகத்திற்குச் சென்று அவமானப்பட்ட தாட்சாயினியான பார்வதி, அந்த அவமானம் நீங்க திலதைப்பதியில் ஒரு புற்றின் கீழ் தவம் செய்து கொண்டிருந்தாள்.
விஷயமறிந்த பிரம்மா புற்றை வெட்ட அம்பிகை தரிசனம் தந்தாள். சிவன், பார்வதி இருவரையும் வழிபட்ட பிரம்மாவின் சாபத்தை நீக்கி ஆசி வழங்கினார்கள்.
இன்றும் திலதைப்பதி பாவங்களை நீக்கி சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது.
*தல பெருமை:*
நற்சோதி என்ற மன்னன் ஒருவன் தன் தந்தைக்கு பிதுர் காரியங்கள் செய்ய வேண்டி வந்தது. எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து அன்னத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ அதுவரை ஓயமாட்டேன் என்று ஊர்ஊராகச் சென்று பித்ரு காரியங்கள் செய்தான் மன்னன்.
கடைசியில் திருத்திலதைப்பதி வந்தபோது பித்ருக்கள் பிண்டத்தை கைநீட்டி வாங்கிக் கொண்டார்களாம்.
அதனால் அந்தமாதிரியான பித்ரு காரியங்களை செய்ய இங்கு செய்ய ஏராளமானவர்கள் இங்கு வருகிறார்கள்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (செதலபதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது.
இதில் ஐந்தாம் இடத்தில் இத்தலம் உள்ளது. இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை.
எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம். வரையறுநாள் தேவையில்லை.
தசரதனுக்கும், ஜடாயுவிற்கும், ராமனும் லக்ஷ்மனனும் தில தர்ப்பணம் செய்த இடம் என்ற புராணப் பெருமை உடையது இத்தலம்.
இராமர் இங்கு தர்ப்பணம் செய்து வழிபட்டதால் தசரதனுக்கு முக்தி அளித்தார் சிவபெருமான் என்று இவ்வாலயத்தின் தலபுராணம் கூறுகிறது.
இத்தல இறைவனுக்கும் முக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார்.
இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. கருவறைக்குப் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், ராமர், லட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையுலுள்ள சிற்பத்தையும் கோயில் பிராகாரத்தில் காணப்பெறலாம். அவசியம் நீங்கள் செல்லும்போது பார்வையிடுங்கள்.
இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். சூரியன், சந்திரன், யானை, சிங்கம், இராமர், இலக்குவன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.
*சிறப்பு:*
இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு கோவில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதியில், இவர் யானை முகம் பெறுவதற்கு முன்பிருந்தவராததலால், *(முந்தைய விநாயகர் என்பதால்)*, இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்காலைத் தொங்கவிட்டும், இடக்காலை மடித்தும், இடக்கையை இடக்காலின்மீது ஊன்றியும், வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக காட்டியும், மனித முகத்துடன் அழகுக் கோலத்தில் காட்சி தருகின்றார்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது *திருப்புகழில்* பாடியுள்ளார்.
*திருப்புகழில்* இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
இராமர் சிவபூஜை செய்யும் உருவிலும், கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்துடனும் காட்சி தருகிறார்.
இத்தலத்தின் தீர்த்தங்களில் ஒன்றான அரிசிலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாஹினியாக செல்கிறது.
இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோவில்களிலுள்ள இறைவனை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
இந்த அரிசிலாற்றில் நீராடி சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார் இராமர்.
*தேவாரம் பாடியவர்கள்:*
*திருஞானசம்பந்தர்* பாடியருளிய பதிகம். இப்பதிகத்தை நாள்தோறும் சிரத்தையுடன் ஓதி வழிபடுவர்கள் சிவனடி சேர்வது திண்ணம் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
சம்பந்தர் இத்தலத்தை மதி முத்தம் என்றே குறிப்பிடுகிறார். ஆகையால் ஊரின் பெயர் திலதைப்பதி என்றும் கோவிலின் பெயர் மதி முத்தம் என்றும் அந்நாளில் வழங்கியிருக்கிறது
பொடிகள்பூசிப் பலதொண்டர்
கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த
நின்ற அழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும்
விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர்
மணங்கமழும் மதிமுத்தமே.
வைகறைப்போதில் தொண்டர்கள் பலரும் கூடி நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவோடு திருவடிகளை மனமாரத் தொழுதேத்தநின்ற அழகனது இடம், கொடிகள் ஓங்கி அசைந்தாடுவதும் திருவிழாக்கள் இடையறாமல் நிகழ்வதுமாகிய திருத்திலதைப்பதியிலுள்ள அழகிய சோலைகளின் மலர்கள் மணம் கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம் கோயிலாகும்.
தொண்டர்மிண்டிப் புகைவிம்மு
சாந்துங்கமழ் துணையலும்
கொண்டுகண்டார் குறிப்புணர
நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனலரிசில்
சூழ்ந்த திலதைப்பதி
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ்
சோலைம் மதிமுத்தமே.
தௌந்த நீரையுடைய அரிசிலாற்றங்கரையிலமைந்த திலதைப்பதியில் விளங்குவதும், வண்டுகள் கெண்டி இசை பயிலும் மலர்களை உடைய சோலைகளால் சூழப்பெற்றதுமாகிய மதிமுத்தம், நெருங்கிவந்து நறுமணப் புகையும் சாந்தமும் மாலைகளும் கொண்டு வழிபடும் அடியார்களின் கருத்தறிந்து. அவர்கட்கு அருள் புரியும் குழகன் இடமாகும்.
அடலுளேறுய்த் துகந்தான்
அடியார் அமரர்தொழக்
கடலுள்நஞ்ச அமுதாக
வுண்ட கடவுள்ளிடம்
திடலடங்கச் செழுங்கழனி
சூழ்ந்த திலதைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன்
பிலிற்றும் மதிமுத்தமே.
திடல்களைச்சுற்றி வயல்கள் சூழ்ந்து விளங்குவதும், மடல்வழியாக வாழைக்கனிசாறு ஒழுகுவதும் ஆகிய வளங்களை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், வலிய விடையை ஏறிச் செலுத்தி மகிழ்பவரும், அடியார்களும் அமரர்களும் தொழுமாறு கடலுள் எழுந்த நஞ்சை அமுதாக உண்டருளியவருமாகிய கடவுள் விரும்பி உறையுமிடமாகும்.
கங்கைதிங்கள் வன்னிதுன்
எருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில்
வைத்த விகிர்தன்னிடம்
செங்கயல்பாய் புனலரிசில்
சூழ்ந்த திலதைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்
தழகார் மதிமுத்தமே.
கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீரை உடைய அரிசிலாறு சூழ்ந்ததும், மேகம் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திலதைப்பதியில் விளங்கும் அழகிய மதிமுத்தம், கங்கை, பிறை, வன்னி, எருக்கு, கூவிளம், நாகம் ஆகியவற்றைத் தம் விரிசடையில் வைத்த விகிர்தனின் இடமாகும்.
புரவியேழும் மணிபூண்
டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு
செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு
வேங்கைசுர புன்னைகள்
மரவமவ்வல் மலருந்
திலதைம் மதிமுத்தமே.
ஞாழல், கோங்கு, வேங்கை, சுரபுன்னை, கடம்பு, முல்லை ஆகியன மலரும் பூங்காவை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், மணிகள் கட்டிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட கொடித்தேரைச் செலுத்தும் சூரியன் நின்று வழிபாடு செய்யும் இறைவனது ஊராகும்.
விண்ணர்வேதம் விரித்தோத
வல்லார் ஒருபாகமும்
பெண்ணர்எண்ணார் எயில்
செற்றுகந்த பெருமானிடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு
சோலைத் திலதைப்பதி
மண்ணுளார்வந் தருள்பேண
நின்றம் மதிமுத்தமே.
விண்ணுலகிலுள்ளவரும், வேதங்களை அருளியவரும், ஒரு பாகமாக உமையம்மையை உடையவரும், தம்மை எண்ணாத திரிபுரத்தசுரர்களின் கோட்டைகளை அழித்துப் பின் அவர் கட்கு அருள் செய்தவரும் ஆகிய பெருமான் உறையும் இடம், தௌந்த நிலாவொளி வீசும் சோலைகள் சூழ்ந்ததும் மண்ணுலகில் உள்ளவர் அருள் பெற வழிபடுவதுமாகிய திலதைப்பதியிலுள்ள மதி முத்தமாகும்.
ஆறுசூடி யடையார்புரஞ்
செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் முருவர்க்
கிடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில்
சூழ்ந்தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனலரிசில்
சூழ்ந்தம் மதிமுத்தமே.
கங்கையைத் தலையில் சூடியவர். திரிபுரப் பகைவருடைய கோட்டைகளை அழித்தவர். மாதொரு கூறர். அவ்விறைவர்க் குரிய இடம், தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும், அழகியதும், நீர்வற்றாத அரிசிலாற்றினால் சூழப்பெற்றதுமாகிய திலதைப்பதியி லுள்ள மதிமுத்தமாகும்.
கடுத்துவந்த கனன்மேனி
யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள்
அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை
புல்கும் மதுப்பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந்
திலதைம் மதிமுத்தமே.
சினத்தோடுவந்த கார்மேகம் போலும் நிறத்தை உடைய இராவணன் வலிய கயிலைமலையை எடுக்க, அவனுடைய முடிதோள் ஆகியவற்றை அடர்த்த இறைவனது இடம், தழைத்து வளர்ந்த பாக்குமரத்தின் இளம்பா வழியாய்ப் பாயும் தேனை உண்டு மந்திகள் விளையாடும் திலதைப்பதியிலுள்ள மதிமுத்தமாகும்.
படங்கொணாகத் தணையானும்
பைந்தா மரையின்மிசை
இடங்கொணால்வே தனுமேத்த
நின்ற இறைவன்னிடம்
திடங்கொள்நாவின் இசைதொண்டர்
பாடுந் திலதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு
செய்யும் மதிமுத்தமே.
ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைத் தன் படுக்கையாகக்கொண்ட திருமாலும், புதியதாமரைமலரில் விளங்கி வேதங்களை ஓதும் நான்முகனும் வழிபட எழுந்தருளிய இறைவன் இடம், தொண்டர்கள் திண்மையான நாவினால் இசை பாடித் தொழும் திலதைப்பதியுள் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமாகும்.
புத்தர்தேரர் பொறியில்
சமணர்களும் வீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட்கி
லாத பெருமானிடம்
பத்தர்சித்தர் பணிவுற்
றிறைஞ்சுந் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு
செய்யும் மதிமுத்தமே.
புத்தர், தேரர், அறிவற்றசமணர், பெருமையில்லாத பித்தர் ஆகிய புறச்சமயத்தார் கூறும் மொழிகளைக் கேளாத பெருமானது இடம், அன்பர்களும் அறிஞர்களும் பணிந்து வழிபடும் திலதைப்பதியில் மதயானைவந்து வழிபட்ட சிறப்புடைய மதிமுத்தமாகும்.
மந்தமாரும் பொழில்
சூழ்திலதைம் மதிமுத்தமேற்
கந்தமாருங் கடற்காழி
யுள்ளான் தமிழ்ஞானசம்
பந்தன்மாலை பழிதீர
நின்றேத்த வல்லார்கள்போய்ச்
சிந்தைசெய்வார் சிவன்சேவடி
சேர்வது திண்ணமே.
தென்றற்காற்று வீசும் சோலை சூழ்ந்த திலதைப்பதியுள் விளங்கும் மதிமுத்தத்தில் எழுந்தருளிய இறைவன் மீது நறுமணம் கமழும் கடற்கரையில் விளங்கும் காழி ஞான சம்பந்தன் பாடிய பாமாலையைப் பழிதீர ஓதி வழிபடுபவர் சிவன் சேவடிகளைச் சிந்தை செய்பவராய் அவ்வடிகளை அடைவது உறுதி.
*இயலாதோர்க்கு:*
மனிதன் தன் வாழ்நாட்களில் தன் வாழ்வை சிறப்பாக ஆக்கிக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்கிறான்.
இம்முயற்சிகளில் சுயமாய் வென்றவர்களும், மற்றவர்களின் உழைப்பைத் திருடி வென்றவர்களும் நிறையவர் உண்டு.
தவறு என்கிறபோது அது பாவம் என்றாகி விடுகிறது. அதே வேளையில், இன்னும் ஒரு பாவமும் இருக்கிறது. என்ன அது என்றால்....?
ஒரு ஆண்மகன் தன் தாய், தகப்பன் மரணமடைந்த பிறகு, பின் வரும் நாட்களில் அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் (ஆடி, தை அமாவாசை) இறந்த தாய், தகப்பனை நினைத்து, தர்ப்பணம் செய்யவேண்டும் என்று இந்து மதம் சொல்கிறது.
அவ்வாறு, செய்ய மறந்தாலும், செய்யாதிருந்தாலும் அது பெரும் பாவம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அவ்வாறு பல வருடங்கள் செய்யவில்லையென்றாலும், அல்லது எனக்கு தெரியவில்லையென்றாலும்பாவம், பாவம்தான். ஆனாலும், இப்பாவத்தைப் போக்கிக் கொள்ள ஒரு வழியும் இருக்கிறது.
வசதியுள்ளவர்கள் காசிக்கோ, இராமேஸ்வரத்துக்கோ சென்று வருவார்கள். ஆனால், நடுத்தர மக்களுக்கு இது முடியுமா? ஆகையால் இறைவன் இந்தத் தலத்தில் எழுந்தருளியிருக்கிறான். அவ்விடம் தான், இந்தச் செதலபதி என்னும் திருத்திலதைப்பதியாகும்.
இங்கு சென்று தாய் தந்தையார்களுக்காக தர்ப்பணம் செய்ய அப்பாவம் தொலையப் படுகிறதென்பது உண்மை.
இச்சூழல்களில் உழல்பவர்கள் இதன் பிறகு திருத்திலதைப்பதி சென்று பாவங்களை போக்கி, இறைவன் கருணையை பெற்று வாழ்ந்தோம் குளங்கள்!
திருச்சிற்றம்பலம்.
Reposting it from Amritha Vahini Google group.