குழந்தை பாக்கியம் அருளும் திருவாலம்பொழில் திருக்கோவில்
தஞ்சாவூரில் இருந்து திருவையாறுச் சாலையில் திருக்கண்டியூரை அடைந்து, அங்கிருந்து மேற்கில் திருப்பூந்துருத்தி வழியாக சென்றால் திருவாலம்பொழில் ஆலயத்தை அடையலாம்.
ஒவ்வொரு சிவ ஆலயமாக வழிபாடு செய்து கொண்டு வந்தார் திருஞானசம்பந்தர். திருவையாறில் வழிபாடு செய்த திருஞானசம்பந்தர், திருப்பூந்துருத்தியில் அப்பர் இருப்பதாக அறிந்தார். அவரைக் காணும் பொருட்டு, பல்லக்கில் ஏறி புறப்பட்டார். வழியில் திருவாலம்பொழில் என்ற இடத்தில் சம்பந்தரின் பல்லக்கில் வந்து கொண்டிருந்தபோது, தன்னைக் காண சம்பந்தர் வருவதாக அப்பர் அறிந்தார். உடனே திருப்பூந்துருத்தி திருத்தலத்தில், தாம் மடம் அமைத்து தங்கியிருந்து செய்துவந்த உழவாரப்பணியை சிறிது நிறுத்திவிட்டு சம்பந்தரை எதிர் கொண்டு அழைக்க வேண்டி விரைந்தார்.
வெகுதொலைவில் சம்பந்தரின் முத்துச் சிவிகை அசைவதும், மணிகளின் ஓசை காற்றினில் கசிந்து வருவதையும் கண்ட அப்பருடன் வந்த பூந்துருத்தி சிவனடியார்கள் சிலிர்த்துப் போனார்கள். இன்னும் விரைவாக நடந்து அருகேயுள்ள வெள்ளாம்பிரம்பூருக்குச் சென்றார்கள். சம்பந்தரும் அவ்வூர் ஈசனை வணங்கிவிட்டு ஊர் எல்லையை அடைந்தார். எதிரே அப்பரடிகளின் அடியார்கள் இரு கைகளையும் சிரசுக்கு மேலே உயர்த்தி சம்பந்தர் பல்லக்கை நோக்கி தொழுதனர். அப்போதுதான் சம்பந்தரும் தமது சிவிகையின் சீலையை உயர்த்தி அடியவர்களை நோக்கி தமது திருமுகம் மலரச் சிரித்தார்.
தன்னை மறந்து சிவிகையை நோக்கி நடந்த அடியவர்கள் கூட்டம், திருநாவுக்கரசரை மறந்தே போனது. அப்பரடிகளும் இதுதான் சமயம் என்று கருதி, அடியார்களுக்குள் சிறியோராய் தம்மை மாற்றிக் கொண்டார். ஆம்! சிவிகையை சுமக்கும் ஒருவரின் தோள் தொட்டு மெல்ல விலக்கி சம்பந்தரின் சிவிகையை தமது திருத்தோளில் சுமந்து வரலானார் அப்பர் பெருமான். திருவாலம்பொழில் நெருங்கியதும் ஞானக் குழந்தை சம்பந்தர் சிவிகையின் திரை சீலையை விலக்கி வெளியே எட்டிப்பார்த்து, ‘அப்பர் பெருமான் எங்கு உள்ளார்?’ என்று அங்கு உள்ளோரிடம் கேட்டார்.
சிவிகை தூக்கி வரும் தம் சிரசை சற்றே வெளியே நீட்டி அண்ணாந்து சம்பந்தரைப் பார்த்த அப்பர், ‘தேவரீருடைய அடியேனாகிய யான் உம் அடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு பெற்று இங்குற்றேன்’ என்றார். சம்பந்தர் உடனே சிவிகையிலிருந்து கீழே குதித்து ‘என்ன காரியம் செய்தீர் ஐயா’ என்று அப்பரை வணங்க, அப்பரும் சம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகி கட்டித்தழுவினர். அடியவர்கள் கூட்டம் கைகளிரண்டையும் மேலுயர்த்தி ‘இதென்ன திருக்காட்சி’ என வியந்து இவ்விரு அடியார்களையும் பூமியில் வீழ்ந்து வணங்கியது.
இந்த நிகழ்வுக்கு ‘பூந்துருத்தி உபசாரம்’ என்று பெயர். அடியார்களின் இந்த உபசாரத்தால் ஒருகணம் ஆலம்பொழில், கயிலாயபுரியாக மாறியது. அப்பரும், சம்பந்தரும் திருஆலம்பொழில் ஈசனைப் பாடித் துதித்து திருப்பூந்துருத்தியை வந்தடைந்தனர்.
ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் சம்பந்தரின் பல்லக்கினை அப்பர் பெருமான் தமது தோளில் சுமந்து வந்ததையும், பின்னர் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உபசாரத்தையும் போற்றி புகழும் வண்ணம் அடியவர்கள் இதனை ‘தோள் கொடுத்த விழா’ என்னும் பெயரில் ஐதீக விழாவாக நடத்திவருகிறார்கள்.
தஞ்சாவூரில் இருந்து திருவையாறுச் சாலையில் 10 கி.மீ. சென்று திருக்கண்டியூரை அடைந்து, அங்கிருந்து மேற்கில் திருப்பூந்துருத்தி வழியாக 4 கி.மீ. சென்றால் திருவாலம்பொழில் ஆலயத்தை அடையலாம்.
இங்கு பைரவருக்கு தனி சன்னிதி இல்லை. ஆம்! சென்னை மயிலாப்பூர் போலவே இங்கும் மூலவரே கபாலியாக, பைரவர் சொரூபமாக விளங்குகிறார். இதனை இத்தல அப்பர் பதிகம் உறுதி செய்கிறது. ‘கமலத்தோன்றலையரிந்த கபாலியை, உருவார்ந்த மலைமகளோர் பாகத்தானை, திருவாலம்பொழிலானைச் சிந்தி நெஞ்சே’ என்கிறார் அப்பர்.
அதாவது பிரம்மனின் தலையை கொய்த பைரவர் சொரூப ஈசன் கபாலி தான், பாகம்பிரியாளின் ஒருபாகம் கொண்டவனான அந்த ஈசன் தான் நம் திருவாலம்பொழில் திருத் தலத்தில் உறைகிறான். அவனை மனதுக்குள் சிந்தியுங்கள் என்கிறார் அப்பர். இத்தல ஈசனை காசிப மகரிஷி வழிபட்டு உள்ளார்.
தட்சனின் குமாரிகளில் வசு என்பவளுக்கு பிறந்தவர்கள் எட்டு பேர். இவர்களுக்கு ‘அஷ்ட வசுக்கள்’ என்று பெயர். வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை இவர்கள் கவர்ந்து சென்றதால் வசிஷ்டர், பூலோகத்தில் சென்று பிறக்குமாறு அஷ்ட வசுக்களுக்கும் சாபமிட்டார். தங்கள் முழு சாபமும் நீங்கிட அஷ்ட வசுக்களும் இத்தல ஈசனை வணங்கி சாபவிமோசனம் பெற்றார்கள். இத்தல ஈசனை பிரதோஷம், அஷ்டமி, திங்கட்கிழமைகளில் வழிபட்டு, கருவறை தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபட நினைத்த காரியங்கள் ஜெயமாகும். இது ஒரு சர்வ தோஷ நிவாரண திருத்தலம் என்கிறார்கள். அதற்கு ஏற்ப இத்தலத்தில் வெளி பிரகாரத்தின் தெற்கில் பஞ்ச லிங்கங்கள் உள்ளன.
பிரதோஷம், அஷ்டமி அல்லது திங்கட்கிழமைகளில் தொடர்ந்து 11 முறை மூலவருக்கும், பஞ்ச லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்வித்து வழிபட்டு வந்தால், சகல கிரக தோஷங்கள், பஞ்சமாபாதகங்கள் விலகும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து 5 அமாவாசை நாட்களில் பகல் பொழுதில் இத்தல மூலவர், பஞ்சலிங்கங்கள், அம்பாள் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து, கருவறை தீபத்தில் தூய நல்லெண்ணெய் சேர்த்து வழிபட்டு வர பித்ரு தோஷங்கள் அகலும்.
இத்தல அம்பாள் ஞானாம்பிகையை தொடர்ந்து 8 பஞ்சமி நாட்களின் மாலைப்பொழுதில் வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல இத்தலத்தில் வழிபட்டால் பிரிந்தவர் கூடுவார்கள். இங்கு வரும் அடியவர்களை உபசரித்து அன்ன தானம் செய்து, தொடர்ந்து 3 பவுர்ணமி நாட்களில் வழிபட்டு வர குடும்பம் ஒற்றுமை பலப்படும்.
இங்கு தலவிருட்சம் ஆலமரமாகும். தொடர்ந்து 8 அமாவாசை நாட்களில், ஈசன், அம்பாள், பஞ்ச லிங்கங்களை வழிபாடு செய்து, ஆலமரத்தை வலம் வரும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
Reposting it from amirthavahini google group.