top of page

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர்  - ஜெயந்தி  (7-10-2017)

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் - ஜெயந்தி

“பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் அடியலால் அரற்றாது என்நா”

என அருளிச் செய்தார் ஞானசம்பந்தப் பெருமானார்.

🌹பித்தொடு மயங்கியபோதும் பிறைசூடிய பித்தனை மறவாத பீடுடைப் பெருந்தகையோரே பெரியோர் என்ற பெயருக்கு உரியோராவர். அத்தகையவர்களில் ஒருவர், ஸ்ரீமத் அப்பைய தீட்சிதேந்திரர்.

அப்பைய தீட்சிதர் கி.பி.16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவான்மியூர், சிதம்பரம், வேலூர் முதலிய தலங்களில் வாழ்ந்தவர்.

வேதாகமகங்கள், புராணஇதிகாசங்கள். இலக்கணம் முதலிய சாத்திரங்கள் எல்லாம் கற்றுவல்ல பேரறிவாளர்.. பெரிய பண்டித சிகாமணி.

👉🏽நூற்றுநான்கு நூல்கள் இயற்றிய மேதை. கவிச்சக்கரவர்த்தி. நூலாசிரியர், உரையாசிரியர் முதலிய ஆசிரியத் தன்மை நிறைந்தவர். 🌻எல்லாவற்றினும் மேலாக பரமசிவ பக்த சிகாமணி.

பிற சமயத்தார் சைவத்திற்குத் தீங்கு இழைக்கத் தொடங்கும் அவ்வப்போது, தம் வாக்கு வல்லபத்தால், அவர்களை வென்று சைவப் பயிர் வளர்த்த வைதிகசைவக் காவலர்.

“அஞ்சுவது யாதொன்று மில்லை; அஞ்ச வருவது மில்லை” என்ற ஞான வீரர்களில் ஒருவராகிய அவருக்கும் ஓரச்சம் தோன்றிற்று. அவருக்குத் தோன்றிய அந்த அச்சம் யாது?

“நனவிலும் கனவினும் நம்பா வுன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்”

என்று ஆளுடைய பிள்ளையார் அருளிச் செய்தபடி நனவு கனவு ஆகிய இரு நிலைகளிலும் சிவசிந்தனை நமக்கு நீங்காமல் இருக்கின்றது.

எனினும் சாகுங் காலத்தில், உளவாகும் வேதனைகளால் அறிவு அழியுமே, அலமரலுறுமே! அப்போதும் என் சிந்தையாகிய வண்டு, சிவனடித் தியானத் தேனில் திளைக்குமோ? நோய், கவலை, கலக்கம் முதலியவற்றிற்பட்டு இளைக்குமோ? என்பதுதான் அவர் கொண்ட ஐயம். அவ்வையத்தைத் தீர்த்துக் கொள்ளவோர் உபாயங் கருதினார்.

👉🏽நம்பிக்கையுள்ள மாணவர்களிடம், ‘நான் ஊமத்தங்காயைத் தின்பேன். அதனால் என் அறிவு கலங்கிப் பித்துறுவேன். அது தெளியும்வரை யான் செய்யும் செயல்களைக் குறித்துக் கொள்வதோடு, யான் பிதற்றுவனவற்றையும் எழுதி வைமின்’ என்று பணித்தபின் ஊமத்தங்காயைத் தின்றார்.

👉🏽பித்தும் பிடித்தது. பிதற்றலும் தொடங்கியது. அப்பிதற்றலில் வெளிப்பட்டவையே ‘ஆன்மார்ப்பணத் துதி சுலோகங்கள்’ ஐம்பதும். இக்காரணத்தால் இந்நூலுக்கு, ‘உன்மத்த பஞ்சாசத்’ எனவும், ‘உன்மத்தப் பிரலாபம்’ எனவும் வேறு பெயர்களும் உள.

ஆத்மார்பண ஸ்துதி: http://shaivam.org/tamil/sta_app_atmarpana_stuti.htm

மாற்று மருந்தால் பித்தம் மாறித் தெளிந்தபின், தம் மாணாக்கர்கள் காட்டிய சுலோகங்களைக் கண்ட பின்னர், தீட்சிதர், தாம் கொண்டிருந்த ஐயம் அகலப் பெற்றார்.

“உண்டியிற் பட்டினி நோயிலுறக்கத்தில் – ஐவர் கொண்டியில்” பட்டபோதும், சாம் அன்றும் சங்கரனை நம் மனம் மறவாது எனத் தைரியம் கொண்டார்.

Thanks -முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி

Recent Posts

See All
ஶ்ரீ முக்காமலா கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி நூற்றாண்டு விழா

“நீர்” அனைவருக்குமான இறைவன் அளித்த வர ப்ரஸாதம்” : மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி, நீதியரசர் திரு கே. ஆர். ஶ்ரீராம். ...

 
 
 
bottom of page