(ஒரு வரலாற்று உண்மைக்கதை!)
அது ஒரு சோழப் பேரரசின் காலம். (விக்கிரமச் சோழன் அல்லது அவருடைய பேரனான இரண்டாம் ராஜராஜன் காலமாக இருக்கலாம்)
திருவாரூர் தியாகேசர் ஆலயத்தில் 'இச்சா சக்தியாக வணங்கப்படுபவள் கொண்டி அம்மன். இந்தக் கொண்டி அம்மனின் பெயரைக்கொண்டு, பிற்காலத்தில் பரவை நாச்சியார் வம்சாவளியில் பிறந்தவள் இந்தக் கொண்டி... ருத்ர கணிகை.
ஆரூர் பெருமானுக்கு சேவை செய்து வாழ்ந்து வந்தார் கொண்டி.
காலையில் திருப்பள்ளியெழுச்சி தொடங்கி பால் அன்னம் சமர்ப்பிப்பது, மரகதலிங்க அபிஷேகம், முதற் காலம், உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாம பூஜை வரை ஆரூர் பெருமானுக்குச் செய்யப்படும் அத்தனை சேவைகளிலும் ஆத்மார்த்தமாகக் கைங்கர்யம் செய்து மகிழ்பவள், கொண்டி. இவள் பாட்டுப்பாடி, அபிநயம் பிடித்து ஆடினால் அன்றைய பூஜை களைகட்டும். ஆரூர் பெருமானுக்கு இவள் அலங்கரித்துத் தைத்த வஸ்திரங்களே சாத்தப்படும். இவள் கொடுத்த மாலைகளே சூட்டப்படும்.
ஆரூர் பெருமானையே சிந்தையில் வைத்து வாழ்ந்து வந்த கொண்டியின் வாழ்விலும் ஒரு சோதனை வந்தது. திருவாரூர் காவல் அதிகாரியாக வந்த ஒருவன் கொண்டியின் மீது ஆசை கொண்டான். ஆரூர் ஆலய வளாகத்துக்குள்ளேயே அத்து மீறினான். 'என்னைத் துன்புறுத்தினால், குத்துவாளால் தாக்குவேன்' என்று சீறினாள். சிறுமதி கொண்ட அந்தக் கொடியவன் உணரவில்லை. வீண்பழி சுமத்தி, கொண்டியை ஆலயத்தைவிட்டே நீங்கச் சொன்னான். நடந்ததை அறிந்த ஆலய அர்ச்சகர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். ஆரூர் பெருமானை விட்டு நீங்க கொண்டி மறுத்தாள். 'ஐயனே, வன்மீகநாதா இந்த அபலையைக் கைவிடலாமா' என்று கதறினாள். தியாகேசனோ அமைதி காத்தார். இனி எந்தப்பயனுமில்லை என்ற நிலையில் 'நீதிநெறி இல்லாத இடத்தில் ஈசன் இருக்க வேண்டியதில்லை; ஈசனே வந்து என்னை அழைக்காமல் மீண்டும் இங்கு வந்து தொழப் போவதுமில்லை' என்று சத்தியம் செய்து விட்டுக் கிளம்பினாள்,கொண்டி.
ஆரூரானைப் பிரிந்தவள், ஒளியை இழந்த தீபமானாள். ஒவ்வொரு வேளையும் புலம்பித் வித்தாள். 'இந்நேரம் பெருமானுக்கு நைவேத்தியம் நடக்குமே... என்ன படைத்தோர்களோ... இந்நேரம் ஸ்வாமி புறப்பாடு ஆகுமே...யார் பாடினார்களோ, யார் இன்று பூமாலை தொடுத்தார்களோ... என்றெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் தவித்தாள்.அவள் தவிக்கத் தவிக்க,
ஈசனுக்குப் பொறுப்பு கூடியது. கொண்டியை உலகமே வியக்கும் வண்ணம் ஆட்கொள்ள வேண்டும் என்று உறுதி கொண்டது சிவம்.
****
திருவாரூரில் அந்த ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா. உத்திரத் திருநாளில் ஆழித்தேர் புறப்பாடு தயார் நிலையில் இருந்தது. அந்த ஆழித்தேர் 10 தேர்க்கால்கள், 9 லட்சம் கிலோ எடை கொண்டதாக பிரம்மாண்டமாக இருந்தது. வேதமந்திரங்கள் முழங்க ,விண்முட்டும் கோஷங்கள் எழும்ப, தேர் இழுக்கப்பட்டது. தேரை 20000 கரங்களும்,யானைகளும், குதிரைகளும் இழுக்கத் தொடங்கின. ஆனால் அந்தப் பிரமாண்டத் தேர் சிறிதும் அசையவில்லை.
சோழ மன்னன் திடுக்கிட்டான். அவனும் அவன் பரிவாரங்களும் இணைந்து இழுத்தும் அசையவில்லை. ஐம்பொன் சிலையாக ஆரூரான் கொள்ளைச் சிரிப்பில் இந்த விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தான். முசுகுந்த சக்கரவர்த்தியால் நிறுவப்பட்ட இந்த ஆழித்தேர்பல நூறு ஆண்டுகளாக அசைந்தாடி திருவாரூரை வலம் வந்து மண்ணகத்தின் புகழ்க் குறியீடாக இருந்தது. அந்த வேளையில், அந்த ஆண்டு பங்குனி உத்திரத்தில் மட்டும் நகர மறுக்கிறது. 'ஏன் இப்படி ஆனது?' என்று எல்லோரும் கலங்கித் தவித்தனர். என்ன செய்வது என்று சோழ மன்னனுக்கும் ஒன்றும் புரியவில்லை. 'பரிகாரம் ஏதாவதிருக்கிறதா?' என்று ஆலய நிர்வாகிகளைக் கடுகடுத்தான். 'சோழத் திருநாட்டில் எல்லோரும் கூடி ஒரு தேரை இழுக்க முடியவில்லை என்றால்,எதிரிகள் என்னநினைப்பார்கள்?இது என்ன சோதனை' என்று வாய்விட்டுப் புலம்பினான். அந்த நேரத்தில் ஆரூர் பெருமானே ஒரு முதியவராக மன்னன் முன் தோன்றினார். 'இந்தத் தேர் நகர வேண்டுமானால், கொண்டி என்ற பெண் இங்கு வந்து தேர் மீது ஏறி , கவரி வீச வேண்டும்' என்று கூறிவிட்டு மறைந்தார். மன்னன் கொண்டி வீடு சென்று, 'அந்த ஈசனே அடையாளம் காட்டி உன்னை அழைத்து வரச்சொன்னார்' என்று விளக்கி, வணங்கி அழைத்தான்.
'ஓடாத தேர் நகர இந்த அடியாளை அழைத்து வரச் சொன்னாரா என் ஸ்வாமி...'என்று வியந்த கொண்டி, ஓடோடி வந்தாள். கண்ணீர் மல்க திருவாரூர் மலர் அம்பலத்தானை வணங்கினாள். தேரை ஓட வைக்க வேண்டிய பெரும் பொறுப்பை எண்ணிக் கசிந்தாள. இனி பெருமான் தன்னை ஆட்கொள்ளப் போகிறான் என்பதை உணர்ந்த கொண்டி, மன்னனிடம் ஒரு உறுதிமொழியை வாங்கிக்கொண்டு தேரினை நோக்கி நடந்தாள்.
கொண்டி ஆழித்தேர் நிற்கும் இடம் வந்து தேர் முன்னால் நடனமாடத் துவங்கினாள். தான் ஈசனோடு இரண்டறக் கலந்து விட்டதாக எண்ணி ஆனந்த நடனமாடினாள்.
திமிலை,மத்தளம்,இந்தளம்,உடுக்கை,கொம்பு, குடமுழா,துந்துபி, பாரி நாயனம்,சங்கு, பிரம்ம தாளம்,குட்டத்தாரை,எக்காளம், திருச்சின்னம்,நெடுந்தாரை,தாரை,கொம்புத்தாரை,உடுக்கை,சேமக்கலம்,தப்பு,கர்ணா, குழித்தாளம், உறுமி, கொக்கரை, தவண்டை,கொடுகொட்டி, நகரா,யாழ், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு,மொந்தை,தகுணிதம்,தாளம்,வீணை,கரடிகை,சச்சரி,தக்கை என ஈசனுக்கு விருப்பமான 70 வகை இசைக்கருவி களும் இசைக்க, அவற்றின் அதிர்வுகளுக்கேற்ப கொண்டி ஆடிக் கொண்டிருந்தாள்.
ஆரூர் மக்களும்,சோழப் பேரரசனும்அவள் ஆடுவதை அச்சத்தோடும், ஆச்சரியத்தோடும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் நடனமாடினால் ஆழித்தேர் அசைந்து விடுமா என்ன... ஆவல் மேலோங்க எல்லோரும் நடனத்தையும், ஆழித்தேரையும் மாறி மாறிப் பார்த்தபடி இருந்தார்கள். அந்த பிரம்மாண்டத் தேர் கொஞ்சமும் அசையாமல் இருந்தது. அதன் தொம்பைகள் கூட மந்திரத்தில் கட்டுண்டாற்போல அப்படியே கிடந்தன.
கொண்டியின் மனதில் எந்த வன்மமும் இல்லை. தன்னை அவமானப்படுத்தியவர்களை மன்னித்து விட்டாள்.காற்றின் திசைக்கேற்ப ஆடும் தீபம் போல் ஆடினாள். 'தேர் ஓட வேண்டும்; அப்போதே என் உயிரும் பிரிய வேண்டும்! இது ஈசன் மீது ஆணை, அமர்ந்தாடும் எங்கள் ஆரூர்க்கூத்தன் மேல் ஆணை...தியாகராஜா... தேவரகண்டப் பெருமானே...' உள்ளுக்குள் மனதார வேண்டியபடி ஆடினாள். தியாகேசப் பெருமான், தம் பக்தையின் விருப்பத்தை உணர்ந்து கொண்டார். கொண்டியின் பக்தியை உலகறியச் செய்ய திருவுளம் கொண்டார். ஆழித்தேர், தானே மெதுவாக அசைந்தது. அதிர்ந்து போன மக்கள் கூட்டம் விண்ணதிர 'ஆரூரா...தியாகேசா...' என முழக்கம் எழுப்பியது. வாத்தியங்கள் நிசப்தமாகின. கொண்டியின் சலங்கையும் அமைதியானது. சோழ மன்னன் பெருங்குரலெடுத்து விம்மி அழுதான். சோழர் குலப்பெண்டிர் ஆனந்தம் மேலோங்க, தேரை நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர். கொண்டி , தேரின் வடத்தைப் பிடித்தாள். மக்கள் கரங்களும் இணைந்தன. தேர் விரைவாக நகர ஆரம்பித்தது. பூமாரி பொழிய சிவச்சின்னங்களும், திருக்குடைகளும், கொடிகளும் முன்னே செல்ல,பதிகம் பாடும் ஓதுவார்கள் பின் செல்ல தேர் நகர்ந்தது.
சிவ வாத்தியங்கள் முழங்க,சிவ கைங்கர்யங்கள் செய்யும் அடியார் ககூட்டம்முன் செல்ல, அவர்களுக்குப் பின்னே மன்னனும் , அவன் பரிவாரங்களும் சென்றன. இருபுறமும் தேரை இழுத்த மக்கள் கூட்டம் விண்ணதிர சிவகோஷம் எழுப்பி வந்தனர். இப்போது வடத்தை விட்டு விட்டு, இரு கரங்களிலும் சாமரத்தை ஏந்திக் கொண்டு தேரில் ஏறினாள் கொண்டி. மன்னன் உள்ளிட்ட சகலரும் ஈசனோடு கொண்டியையும் வணங்கினார்கள். அவள் எதையும் கண்டு கொள்ளும் நிலையிலில்லை. சிந்தையெல்லாம் சிவனில் ஊறிக்கிடந்தது. சிவபதத்தை அடையப்போகும் நேரத்திலேயே மனம் ஆழ்ந்திருந்தது. "ஐயா தியாகேசா,இந்த எளியவளுக்கு இத்தனை பாக்கியமா... எளியோர்க்கு எளியோனே, எந்த ஊரில் நான் அவமானப்பட்டேனோ அந்த ஊரிலேயே என்னைத் தேரேறி வரச்செய்து ஆட்கொண்டாயே, இதற்கு மேல் நான் மண்ணில் இருக்கலாமா... உன்னருகில் அமர்ந்து ஊர்வலம் வந்த நான், இனி தரையிறங்கி நடக்கலாமா... இதோ என் உயிர். எடுத்துக்கொள். உயிரற்ற என் சடலம்தான் தேர்விட்டு இறங்க வேண்டும். இது கமலேசர் மீது ஆணை. எங்கள் தியாக சிந்தாமணி மேல் ஆணை " என்று பிரார்த்தித்தாள். ஊரை வலம் வந்த தேர், நிலை வந்து சேர்ந்தது.பழுத்த பழம் காம்பை விட்டு நீங்கியது. ஆம், சிவத்தை நோக்கி கொண்டியின் ஆன்மா விரைந்தது. மக்கள் கூட்டம் கதறியது. மன்னன் , தான் கொடுத்த சத்தியத்தின்படி திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை காவிரிக் கரைக்கு, கொண்டியின் சடலத்தைக் கொண்டு சென்றான். தகனம் செய்தான். வழியெங்கும் விநாயகர் ஆலயங்கள் அமைத்தான். அவை இன்றும் கொண்டியின் தியாகத்தை நினைவு கூர்கின்றன. 'இனி ஆழித்தேரை அலங்கரிக்கும் உரிமை கொண்டியின் வம்சாவளியினருக்கே.. அதுமட்டுமல்ல, தேரின் வடத்தை முதலில் பிடித்திழுக்கும் முதல் மரியாதையும் அவர்களுக்கே...' என்றும் அறிவித்தான் சோழராஜன். அது 19-ம் நூற்றாண்டு வரை நடைபெற்று வந்தது. கொண்டியின் வம்சாவளியினருக்கு சோழன் அளித்த நிலமும், 'கொண்டித்தோப்பு' என்று திருவாரூர் அருகே இன்றும் இருக்கிறது. திருவாரூர் அருகே ஓடும் நதிக்கு 'கொண்டி' என்றே பெயர். திருவாரூர் செல்லும் பக்தர்கள் இனி தியாகேசனுக்கு அருகில் இருக்கும் கொண்டியையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்த பக்திக்கு கொண்டி ஓர் அழுத்தமான அடையாளம்.
🙏
ஆதாரங்கள்: *********
*இலங்கை ருத்ர கணிகை அஞ்சுகம் அம்மையார், 1911ஆம் ஆண்டில் எழுதிய 'ருத்ர கணிகையர்'