top of page

ராமன் - தமிழ் இலக்கியங்கள்

ராமன் கதை கேளுங்கள்...

தமிழ் இலக்கியங்கள் பல இடங்களில், பாரதத்தின் ஆன்மா ராமன் என்றும், திருமாலின் அவதாரம் என்பதையும் பதிய வைத்துள்ளது.

மகாபாரதம், ராமாயணம் இந்தியா முழுக்க, அதன் நாடி நரம்புகளில் பரவியிருக்கிறது.அதற்கு தமிழிலக்கிய அடையாளங்களை பார்ப்போம்.👇

#புறநானூறு

|| கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு ||

இராமனுடன் காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் கடத்திச் சென்றான். அவள் இராமனுக்கு வழி தெரிந்து, தன்னை பின்தொடர, அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக அங்கங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள்.

அவள் அணிந்திருந்ததைப் பார்த்த செங்குரங்குகள் அவற்றை எடுத்து, எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் மாற்றி மாற்றி அணிந்துகொண்டது என இந்த, புறம் 378ஆவது பாடலில் ஊன் பொதி பசுங்குடையார் சொல்கிறார்.

இன்றும் தென் மாவட்டத்தில் தூத்துக்குடி அருகே உள்ள ஊர் பெயர் 'குரங்கணி'. இது சீதாதேவியின் முத்து ஆரம் விழுந்த இடமாக நம்பப்படுகிறது.ஊன் பொதி பசுங்குடையார், சோழன் இளஞ்சேட் சென்னி அரண்மனை வயிலில் பாடிய அந்த பாடலின் கவித்துவ வரியாகவே 'குரங்கணி' என்று உள்ளது.

-----------------------------

#அகநானூறு

|| வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் ||

இராமன், தன் இராவண வதத்திற்குப் பின், பாண்டியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தனுஷ்கோடி வந்தடைந்தான். முழங்கிக்கொண்டிருக்கும் கடல், அமைதியோடு காணப்பட்டது.

அங்கே ஆறு கடலோடு கலக்கும் முன்றுறை (முன் துறை) ஓரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அந்த மரத்தடியில் அமர்ந்து, இராமன் தன் மறைகளை ஓதிக்கொண்டிருந்தான். அப்போது பல விழுதுகளை உடைய அந்த ஆலமரம், தன் ஒலிகளை அடைத்து வைத்துக்கொண்டது.

அந்த ஆலமரத்துப் பறவைகள், ஒலிப்பதை மறந்து கேட்டுக் கொண்டிருந்தன.அனைத்து உயிரினங்களும் வாய்மூடி அமைதியாக இருந்தன என்று, அகநானூறு கடுவன் மள்ளனாரின் பாடல் சொல்கிறது.

---------------------------

#பதிணெண்கீழ்க்கணக்கு

#பழமொழிநானூறு

|| பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து, இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;- பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல் ||

இலங்கை அரசன் ராவணனின் தம்பி வீபிடணன். இவன் ராமனை நண்பனாகப் பெற்று இலங்கை அரசனானான் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.

---------------------------

#சிலப்பதிகாரம்

|| தாதை யேவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன் வேத முதல்வற் பயந்தோன் என்பது நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ ||

வேத முதல்வனான ராமனே தன் அவதாரத்தில் அவன் தந்தை சொல்ல, சீதையுடன் காட்டிற்கு வந்து அவளை பிரிந்து கடும் துயரமுற்றான் என்பது உனக்கு தெரியாதா?

அந்த நெடுமொழி அதாவது காலகாலமாக மக்கள் சொல்கிற அந்த கதையை நீ அறிய மாட்டாயா? என சிலப்பதிகாரம் ஊர்காண்காதையில் சமண துறவியான கவுந்தியடிகள், கோவலனிடம் ஆறுதல் சொல்கிறார்.

சிலப்பதிகாரம் வேத முதல்வன், நாரணன் அவதாரம் என்றே சொல்கிறது இராமனை.

|| மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே! ||

- ஆய்ச்சியர் குரவைப் பாடல், மதுரைக்காண்டம்.

மூவுலகத்தையும் தன் இரண்டடியால் அளந்து மகாபலியின் ஆணவத்தை அடக்கிய வாமனன், தன் தம்பியுடன் காட்டிற்கு வந்து இராவணனை வதம் செய்து இலங்கையை அழித்த இராமன், இந்த அவதாரங்களை எடுத்த திருமாலின் பெருமையை கேட்காத செவி எல்லாம் ஒரு செவியா?

என அயோத்தியில் ராமஜென்ம பூமியில் கிடைத்த 12ஆம் நூற்றாண்டு கல்வெட்டு போல பலி, ராவணனின் ஆணவத்தை அடக்கியவன் என்கிறதையே சொல்கிறார், அதற்கு வெகு காலம் முன்பே இளங்கோவடிகள்.

|| அரசே தஞ்சம் என்று அரும் கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போல ||

- மதுரைக் காண்டம்/புறஞ்சேரி இறுத்த காதை

தசரதன் ஆணையால் காட்டிற்கு இராமன் போன பின்னர் அயோத்தி மக்கள் "அரசே, தஞ்சம்" என்று கூறி வருந்தியது போல, புகார் நகர மக்கள் கோவலன் பிரிவால் வாடியதாக சொல்கிறார் இளங்கோவடிகள்.

இதில் எவ்வளவு துல்லியமாக அயோத்தி நகர மாந்தரை பற்றி கம்பராமாயணம் எழுதும் முன்னரே இளங்கோவடிகள் படம் பிடித்தபடி காட்டுகிறார் பாருங்கள்.

------------------

#மணிமேகலை

|| நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றிஅடல் அரு முந்நீர் அடைத்த ஞான்றுகுரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்அணங்கு உடை அளக்கர் || - உலக அறவி புக்க காதைபூமியில் பிறந்த நெடியோனான திருமாலின் அவதாரம் இராமன், கடலை அடைத்து வழியமைக்க குரங்குகளை பயன்படுத்தினான். அப்போது கொண்டுவந்து போட்ட மலைகள் எல்லாம் கடலில் அமிழ்ந்து மறைந்தது.இப்படி சிலம்பினுடைய இரட்டை காப்பியமான மணிமேகலை, இராமசேதுவை உறுதி செய்து இராம காதையை பாடுகிறது.|| மீட்சி என்பது இராமன் வென்றான் எனமாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் ||-

சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதைஅதாவது இராமன் வென்றான் என்கிறபோதே இராவணன் தோற்றான் என்பது பொருள் என அழுத்தி சொல்கிறது இராம இராவண யுத்த நிறைவை.

இந்த பாரத நிலமெங்கும் இராமன் தன் அறத்தால் நிறைந்து வாழ்கிறான். அவன் பாதம்பட்ட பூமி இதுவென சொல்லிக்கொள்ள இங்கே ஒவ்வொரு நகரமும், காடும், மலையும் ஏங்குகிறது.நம்முடைய இலக்கியங்களின் காலத்தை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கே நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதை எவ்வளவு பழையது என்கிறீர்களோ, அதை விட பழையது இராமனுக்கும் தமிழகத்துக்குமான உறவு.பாலமை தவிர் நீ; என் சொல் பற்றுதிஆயின், தன்னின்மேல் ஒரு பொருளும் இல்லாமெய்ப்பொருள், வில்லும் தாங்கி,கால் தரை தோய நின்று,கட்புலக்கு உற்றது அம்மா!''மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து'' என, வணங்கு, மைந்த! -

கம்பராமாயணம் இராமனால் வீழ்த்தப்பட்ட வாலியை நோக்கி கதறுகிறான், மகன் அங்கதன். வாலி சொல்கிறான் அவனை நோக்கி, "உன் சிறுபிள்ளைத்தனத்தை கைவிட்டு என் பேச்சினை கேள். தனக்கு மேல் ஒரு பொருளும் இல்லை என்ற பெருமையுடைய மெய்ப்பொருளான கடவுள், வில்லினை தோளில் தாங்கி நமக்காக தரையில் இறங்கி வந்திருக்கிறான்.நம் கண்கண்ட தெய்வமாக நிற்கும் அவன் இப்பிறவி நோய்க்கு மருந்து நீ அவனை வணங்கு" என்கிறான்.அதோடு, இராமன் என்னை கொல்லவில்லை எனக்கு பரமபதத்தை வழங்கினான் என்ற அறிவுரையையும் சொல்கிறான். இந்த காட்சியை விளக்கும் இரண்டு கையகல சிற்பங்கள் கீழே உள்ளது. முதல் படம் பொயு 10ஆம் நூற்றாண்டு சோழர் கால கோவில் திருவிசலூரில் உள்ள வாலி வதை படல காட்சி. இரண்டாவது படம் பொயு 12ஆம் நூற்றாண்டு அங்கோர்வாட் சிற்பம். இந்த பாரத தேசம் முழுக்க, இந்நிலமெங்கும் கொண்டாடப்பட்ட அவதாரம் ஸ்ரீ இராமச்சந்திரமூர்த்தி.

ஜெய் ஸ்ரீராம்! 🙏தசரதகுமாரன் - அயோத்தி நாதன்🙏

Courtesy: @SundarRajaCholan

333 views0 comments
bottom of page