top of page

ப்ரஹ்மஸ்ரீ S.V.ஸ்வாமிநாத ஆத்ரேயர்

ப்ரஹ்மஸ்ரீ S.V.ஸ்வாமிநாத ஆத்ரேயர்


ப்ரஹ்மஸ்ரீ ஆத்ரேயர் ஸம்ஸ்க்ருதம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார். அவர் 19.11.1919 கார்த்திகை ஸதயம் அன்று சிமிழி ப்ரஹ்மஸ்ரீ வேங்கடராம ஶாஸ்த்ரிகள் - ஸ்ரீமதி V.சங்கரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவர் "மணிக்கொடி" கால எழுத்தாளர்களில் ஒருவராக மிளிர்ந்தார். அவரது "மாணிக்கவீணை" என்ற சிறுகதைத் தொகுப்பு அவரது எழுத்துநடையின் அழகுக்குக் கட்டியம் கூறும். ஆத்ரேயர் அவர்கள் சிறந்த ராமபக்தர்.. தியாகராஜ அனுபவங்கள், ஸ்ரீதர ஐயாவாளின் நாம அனுபவங்கள், நாம ஸாம்ராஜ்யம், பக்த ஸாம்ராஜ்யம், ராமநாமம், ஸமர்த்த ராமதாஸர் சரித்ரம், ஜய ஜய ஹநுமான் முதலியவை அவருடைய மிகச்சிறந்த படைப்புகள். ப்ரஹ்மஸ்ரீ ஆத்ரேயர் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகளின் நேரடி ஶிஷ்யர்களின் ஶிஷ்யர்களான உமையாள்புரம் ஸ்ரீ ஸ்வாமிநாத பாகவதரிடமும் எம்பார் ஸ்ரீ ஸ்ரீரங்காசாரிடமும் த்யாகராஜ கீர்த்தனங்கள் உருவான வரலாற்றைத் தெரிந்து கொண்டு ஒரு 12 கீர்தனங்களின் பின்னணியை தனது தியாகராஜ அனுபவங்கள் என்ற நூலில் வழங்கியுள்ளார். அவர் கீதாப்ரஸ் நிறுவனர் ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா அவர்கள் பகவத்கீதைக்கு எழுதிய ஹிந்தி மொழிபெயர்ப்பான "தத்வவிவேசநீ" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்து அந்நூல் தற்போது வரை நான்கு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது. ப்ரஹ்மஸ்ரீ ஆத்ரேயர் கோஸ்வாமி துளஸீதாஸர் இயற்றிய "ராமசரிதமாநஸம்" என்னும் நூலையும் தமிழாக்கம் செய்து அந்நூலை சென்னை பகவந்நாமா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரின் "ஶிவலீலார்ணவம்" மற்றும் ஸ்ரீ ராமபத்ர தீக்ஷிதரின் "ராமபத்ரஸாஹஸ்ரமஞ்சரீ" ஆகிய நூல்களும் ஆத்ரேயரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஒரு ஆராய்ச்சியாளராக ப்ரஹ்மஸ்ரீ ஆத்ரேயர் சிவரஹஸ்யம் - பகுதி I (700 பக்கங்கள்), சிவரஹஸ்யம் - பகுதி II (400 பக்கங்கள்), அஶ்வஶாஸ்த்ரம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் (300 பக்கங்கள்), ஸ்ரீ வேங்கடேஶவிலாஸ சம்பு (300 பக்கங்கள்) ஆகிய நூல்களை பரிசோதித்து தஞ்சாவூர் ஸரஸ்வதீ மஹால் நூலகத்தின் மூலமாக வெளியிட்டுள்ளார். ஆத்ரேயர் தனது ராமானுபவங்களை 100 ஶ்லோகங்கள் வாயிலாக "ராமமாதுரீ" என்ற நூலில் வழங்கியிருக்கிறார். மேலும்"அந்தர்யாம்யநுஸந்தாநம்" மற்றும்"க்ருஷ்ணராமலீலா" ஆகிய நூல்கள் அவருடைய பக்தியின் மேன்மையை வெளிப்படுத்துகின்றன. திருவிசலூர் ஸ்ரீதர ஐயாவாளின் சமகாலத்தவரான ஸ்ரீ ராமகவி என்பவரின் ராமாஷ்டபதிகளை மூலபாட பரிஶோதனை செய்து தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டார் ஆத்ரேயர். காஞ்சீ காமகோடி பீட ஆசார்யர்களின் பல க்ஷேத்ர‌ யாத்திரைகளை "காஞ்சீ காமகோடி பீட யஶோலஹரீ" எனும் நூலில் ஸம்ஸ்க்ருத ஶ்லோகங்களாக விவரித்துள்ளார் ஆத்ரேயர். காஞ்சீ காமகோடி பீட ஆஸ்தான வித்வானாக விளங்கிய ஆத்ரேயரின் பணிகளை அங்கீகரித்து பூஜ்யஶ்ரீ ஆசார்யாள் அவருக்கு "ஆஶுகவிதிலக" என்று விருது வழங்கினார். தன்னை ஸ்ரீக்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் ஸங்கத்தில் இணைத்துக் கொண்ட ஆத்ரேயருடைய பக்தி இலக்கியத் தொண்டைப் பாராட்டி ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவருக்கு "த்யாகராஜசரணரேணு" மற்றும் "ஸாஹித்ய விஶாரத" எனும் பட்டங்களை வழங்கி தஞ்சாவூரில் கௌரவித்தார். பரம ராமபக்தராக ஆன்மீக இலக்கிய உலகில் ஒப்பற்ற நூல்களைப் படைத்த ப்ரஹ்மஸ்ரீ ஸ்வாமிநாத ஆத்ரேயர் 19.12.2013 அன்று தனது 94வது வயதில் இறைவனுடைய திருவடிகளை அடைந்தார்.


We have arranged a book stall of Bhagavannama Publications at the venue on 8th December during the event. Books authored by Brahmashri Swaminatha Ātreya can be purchased on that occasion. Rama Rama Rama Rama Rama.



46 views0 comments

留言


bottom of page