வாழவைக்கும் வாளாடி உலகாயி J K SIVAN
வாளாடி எனும் கனவு ''உலகத்தில்'' நான் மூன்று நாள் இருந்து வருஷம் ரெண்டு ஆகப்போகிறது என்றாலும் இன்னும் நினைவில் பச்சையாக இருக்கிறது.
அந்த ''உலகத்தை '' ஆள்பவள் உலகாயி. ஆமாம் ஒரு சக்தி வாய்ந்த அம்மன் வாளாடியில் கோயில் கொண்டுள்ள உலகாயி அம்மன். 1908ம் வருஷம் அவளைக் கண்டு பிடித்து பிரதிஷ்டை பண்ணினார்கள். அன்று முதல் எல்லா வயல்களிலும் நெல்மணிகள் இடுப்புயரத்துக்கு வளர்ந்தனவாம். எங்கும் வாழையும் கரும்பும் ஆள் உயரத்துக்கு செழித்து காற்றில் தலையசைக்கிறதாம். என்னப்பா காரணம் என்று ஒருவரைக் கேட்டதற்கு:
''நெல்லுல பலம், வாழையிலே குளிர்ச்சி, கரும்புலே தித்திப்புமாக எங்க உலகாயி இருந்து கொண்டு
எங்களைக் காப்பத்தறா ''. ஒண்ணும் வேணாம். ஒரு சின்ன கற்பூரம் போதும் அவளுக்கு. குளிர்ந்து போய் நம்ம சந்ததிக்கே துணையா வருவா, கூடவே இருப்பா எங்க உலகாயி'' என்று ஏகோபித்து எல்லோரும் பதிலளிக்கிறார்கள்.
வயலின் வித்வான் லால்குடி ஜெயராமனின் பாட்டி, அதாவது அப்பா கோபாலய்யரின் அம்மா, உலகாயியின் பக்தை. உலகாயி யார் தெரியுமா? கொல்லி மலையிலிருந்து இங்கே வந்திருக்கும் ஸ்ரீ வைஷ்ணவி. அவள் மேல் கும்மி பாட்டு பாடி, அது பிரபலமாகி, லால்குடி, பூவாளூர் னு சுத்து வட்டாரத்திலேருந்து எல்லாம் பக்தர்கள் வராங்க.'' என்கிறார்கள். அவளுக்கு உலகாயி ன்னு பேரு . ஆனால் கருவறையில் சப்தமாதாக்களாக இருக்கா. கோவில்ல கருப்பண்ணசாமி , காத்தவராயன், சேவுக பெருமாள், மதுரை வீரன் எல்லோருமே இருக்காங்க. வேறென்ன வேணும்?
தை மாச அறுவடையாய்ட்டுசுன்னா அடுத்து, பங்குனிலே என்ன விதைக்கறதுன்னு உலகாயி கிட்டே கேட்டுட்டு தான் பயிர் வைப்பாங்க. பங்குனிலே திருவிழா அஞ்சு நாள் ஓஹோன்னு நடக்கும். வாளாடிக்கு நிறைய பேரு வெளியாளுங்கள்லாம் வருவாங்க. பங்குனி முதல் ரெண்டு புதன்கிழமையும் காப்பு கட்டிட்டு, திங்கக் கிழமை லேருந்து அஞ்சு நாள் பல்லாக்கு, சப்பரம், தேரு எல்லாம் ஊர்வலம் வரும். ஊர் சனங்க, வெளியூர் பக்தர்கள் எல்லோரும் வேண்டுதலை நிறைவேற்றுவாங்க. முடி இறக்கறது , பாவாடை புடவை சாத்தறது, பொங்கல் படையல் எல்லாம் நடக்கும். அத்தினி பேருக்கும் சாப்பாடு. வாளாடிக்கு வந்து உலகாயி அம்மனை ஒரே ஒருக்கா தரிசனம் பண்ணினாப் போதும்… அதுவரை நாம பட்ட கஷ்டமெல்லாம் ஓடிடும்; எல்லாக் கெட்டதுகளும் மறைஞ்சு, நல்ல நல்லதுங்க நடக்க ஆரம்பிச்சிடும்” என்று மனநிறைவுடன் சொல்கிறார்கள், அம்மனின் பக்தர்கள்.
”எங்களுக்கு எல்லாமே உலகாயி அம்மன்தான்! வாளாடில பிறந்து வளர்ந்து, இன்னிக்குக் கடல் கடந்து எங்கேயோ போயிட்டாலும், சின்னதா ஒரு துக்கம்னாலும், ‘அம்மா உலகாயி… நீதாம்மா காப்பாத்தணும்’னு ஒரு நிமிஷம் கண்ணை மூடி பிரார்த்தனை பண்ணினாப் போதும்; மனசுல இருந்த சங்கடங்களும் சஞ்சலங்களும் சட்டுனு விலகிடும். இது எங்க எல்லோருடைய அனுபவம்'' என்கிறார்கள்.
திருச்சி- லால்குடி வழியிலே சமயபுரம் டோல்கேட் பக்கத்திலே இருக்கிற ஊரு வாளாடி. திருச்சி சத்திரம்
பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ..
ஒரு கதை இருக்குது சொல்றேன் கேட்டுக்கிடுங்க என்று ஒருவர் சொன்னார். கேட்டேன்.
வாளாடியில் ஒரு கோயில் கட்ற வேலை செய்யற ஸ்தபதியோட குழந்தைக்கு திடீரென்று ஏதோ நோய் வந்தூட்டுது. பூச்சி கடியா
இருக்குமோன்னு வைத்தியர்கிட்டே போனாரு.
‘ இன்னாபா இது, இந்தக் குழந்தைக்கு இன்னா நோய், எதனாலே ன்னே கண்டுபிடிக்கமுடியலியே , தெரியலியே ''ன்னுட்டார் வைத்தியரு .
அப்புறம் ஸ்தபதி உலகாயிக்கிட்டே வேண்டிகிட்டார்
''மாதாவே, நீ தான் என் குழந்தையை காப்பாத்தணும்னுட்டு'' அழுது கொண்டே வீட்டுக்கு வந்துட்டார்.
ராத்திரி ஸ்தபதி கனவிலே உலகாயி வந்தாள் .
‘உன் குழந்தைக்கு ஒண்ணு மில்லேடா. சப்த மாதாக்களில் நானும் ஒருத்தி. கொல்லிமலையில் இருந்து நான் இங்கே வந்திருக்கிறேன். இதை இந்த ஊருக்கு நீ தெரியப்படுத்தணும் . என் விபூதி சாம்பலை குழந்தை மேலே பூசு சரியாயிடும் பாரு. நான் இந்த ஊரிலே தங்கி நீங்க எல்லோரும் நல்லா இருக்க செய்யணும். எனக்கு நீ ஒரு கோயில் கட்டு . '' இந்த இடத்திலே கட்டு'' என்று ஒரு இடத்தையும் அடையாளம் காட்டினாள் உலகாயி''
உலகாயி அம்மன் கோயிலுக்கு ஒருமுறை வந்து, புடவை சார்த்தி, விளக்கேற்றி வழிபட்டால்… திருமணத் தடை அகலும்; சந்ததி சிறக்கும்; கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
வாளாடியை வாழவைக்கும் ஒரு பெரிய அம்மா உலகாயி . ஆயி அப்பன் என்றால் அம்மை+அப்பன் உலகமெல்லாம் வாழ அருள்பவள். வாளாடி நாயகி! 'வாளாடிக்கு வந்து உலகாயியை தரிசிக்க எனக்கு உதவியவர் வாளாடியில் அற்புதமான தர்ம கார்யங்களை செய்து கொண்டுவரும் அருமை முகநூல் நண்பர் ஸ்ரீ தத்தாத்ரேயன் வீட்டில் தங்கி வாளாடி உலகாயியை தரிசித்தேன். அருகே லால்குடி குணசேகரன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யும் பாக்யத்தை கொடுத்த புண்யவான். அந்த கோவில்களை பற்றி நிறைய எழுதி இருக்கிறேன்.
By Shri J K Sivan on Facebook
Comments