top of page

தமிழகத்தின் கலை கலாச்சார பண்பாட்டு இருதய ஸ்தானம் பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்

Sri Periyava Anugraha Bashanam at Punnainallur Mariamman Temple

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து சீர்காழி வரையிலே இருக்கக்கூடிய விசாலமான இந்த ஜில்லாவிலே, மாவட்டத்திலே பல ஸ்தலங்கள் இருக்கின்றன. காவிரி நதியினுடைய வடகரை மற்றும் தென்கரையிலே சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், ஞானசம்பந்தர், திருநாவுக்கரச பெருமான், மாணிக்க வாசகர், இப்படி நால்வரால், பதிகங்கள் இயற்றப்பட்ட பாடல் பெற்ற ஸ்தலங்களும், வைப்பு ஸ்தலங்களும் இப்படியாக இருநூறுக்கும் மேற்பட்ட ஸ்தலங்கள் இருக்கின்றன. பல்வேறு திவ்ய தேசங்கள், நூற்றியெட்டு திவ்ய தேசங்களிலே பல திவ்ய தேசங்கள் தஞ்சாவூர் ஜில்லாவிலே இருக்கின்றன.‌ நிர்வாக வசதிக்காக தற்பொழுது தஞ்சை மாவட்டமானது நான்கு மாவட்டங்களாக இருந்தாலும், அல்லது நாலரை மாவட்டமாக புதுக்கோட்டை பக்கத்திலேன்னா அதுவும் சேர்த்து இருந்தாலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதியதாக ஆரம்பிக்கப்பட்ட மாயவரம், ஏற்கனவே கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த புதுக்கோட்டை. இப்படியாக இவ்வளவு பெரிய ஊரிலே அத்புதமான, அதிசயமான பல கோவில்கள் இருக்கின்றன. பல்வேறு முனிவர்கள் எல்லாம் தவம் செய்த புண்ணிய ஸ்தலம். இந்த தஞ்சாவூர் ஜில்லாவிலே நம்முடைய காஞ்சி பெரியவர்கள் வராத ஊரே இல்லை. அப்படி வந்ததும் சாதாரணமாக வரவில்லை அவர். உங்களுக்கு எல்லாம் இந்த ஊர் தெரியுமோ தெரியாதோ அவருக்கு மட்டும் தெரியும். இந்த ஊரிலேயே இருக்கக்கூடிய உங்களுக்கு கூட ஓரளவு விவரம் தெரிஞ்சிருக்கும். அவர் தஞ்சாவூர் ஜில்லாவை முழுக்கவும் அறிந்தவர். எல்லாம் வந்து யானை, குதிரை, பசுமாடு, வேத பாடசாலை எல்லாவற்றோடும் இந்த ஊரிலே வந்து தங்கி இருந்து, பல நாட்கள் பேசாமல் மௌன விரதம் இருந்து, பல நாட்கள் மணிக்கணக்காக ப்ரசங்கம் செய்து, இப்போ நீங்கள் ஸ்வாமி புறப்பாடு பண்ண போறீங்க அவர் வந்து அந்த காலத்திலே பட்டணப் ப்ரவேசம்னு நிறைய பண்ணி இருக்கார். அப்படி எல்லா ஊருக்கும் வந்து ஆசி வழங்கிய இந்த பிரதேசத்திலே நீங்கள் எல்லோரும் வசிப்பது உங்கள் எல்லோருக்கும் புண்யமான ஒன்று. அவர்கள் எல்லா ஊருக்கும் வந்து சந்திரமௌளீஶ்வரர் பூஜை செய்து, தீர்த்த ப்ரஸாதம் கொடுத்து, அன்னதானங்கள் எல்லாம் நடத்தி, அப்படி நம்முடைய தர்மத்தை மறுபடியும் ப்ரசாரத்துக்கு கொண்டு வந்தார். எப்படி கோவிலை நீங்கள் புதுப்பிச்சு இருக்கிறீர்களோ, அது போன்று ஆன்மீகத்தைப் புதுப்பித்தவர் நம்முடைய காஞ்சி பெரியவர்கள். அதற்கு அப்பறம் நம்முடைய ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் பொன்விழா திட்டத்தின் கீழாக பல பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்து ஏழை எளிய மக்கள், அனைத்து சமூகத்தினர் இடையேயும் இந்து மதத்தினுடைய சிறப்பை பரப்பி, அனைவரும் இந்துக்கள், அனைவரும் பக்தர்கள், அனைவரும் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதை எளிமையாக மக்கள் நடுவே வந்து அப்படி ப்ரசாரம் செய்து, இப்படி இரண்டு பெரியவர்களும் தஞ்சை ஜில்லாவுக்காக அவர்கள் செய்ததை நீங்கள் எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இந்த திருப்பணியை எல்லாம் செய்திருக்கிறீர்கள். இன்னும் மேற்கொண்டு நிறைய பேர் மெடாராஸிலிருந்தும், பம்பாயிலிருந்தும் வந்து உங்களுக்கும் உதவியாக இருந்து, நீங்களும் உதவியாக பொறுப்பாக வேலைகளை செய்து கொடுத்து, இந்த காயாரோஹணஸ்வாமி நீலாயதாக்ஷி அம்மன், நம்முடைய பெரியவர்கள், அதற்கு முன்னாடி இருந்த பெரியவர்கள் எல்லாரும்கூட இந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள். இளையாத்தாங்குடி என்று புதுக்கோட்டை பக்கத்திலே இருக்கிறது. (இங்கு 65 வது ஆசார்யாள் சுதர்சன மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் உள்ளது)

குருவோட குரு அவர். அப்படி பல தலைமுறைகளாக சங்கர மடத்திற்கு இங்கு ஒரு தொடர்பு இருக்கிறது. அதற்காகத்தான் நாங்கள் திருவண்ணாமலையிலிருந்து நேற்றைக்கு ராத்திரி திருவானைக்காவல் வந்தோம். நேற்றைக்கு ராத்திரியே இங்கு வரலாம் என்று யோசனை பண்ணினோம். அதற்கப்பறமா இன்னிக்கு காலையிலே பூஜை எல்லாம் முடிச்சுட்டு சாயந்திரம் ப்ரதோஷமாக இருந்ததாலே ப்ரதோஷத்தையும் கொஞ்சம் முன்னாடியே முடிச்சு, 7:47 க்கு அங்கேந்து கிளம்பி இங்கே வந்தோம். திருவண்ணாமலைக்கு இவர்கள் எல்லாம் வந்தார்கள். இந்த அம்மாவும்சரி, திருப்பணிச் செம்மல் அந்த மஹாலக்ஷ்மி அம்மாவும்சரி வந்து இப்படி எல்லாம் நன்கு விவரமாக செய்திருக்கிறார்கள். இது போன்ற நல்ல பக்தியான அதிகாரிகள் எல்லாம் நிறைய கோவில்களுக்கு எல்லாம் வந்து மேலும் மேலும் நல்ல திருப்பணிகள், கும்பாபிஷேகங்கள், நித்ய பூஜைகள் எல்லாம் செய்து நீங்கள் எல்லாரும் இந்த திருப்பணியிலே கலந்துண்டு, தொடர்ந்து நல்ல முறையில் பராமரித்து இந்த கோவில்லே நடக்க வேண்டிய ஆவணி ஆயில்யம். ஆவணி மூலத்திலே மதுரையிலே பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஊரிலே ஆவணி ஆயில்யத்திலே அதிபக்த நாயனார், பக்தினாலே விசேஷம், அது வந்து ரசம்னு சொன்னா அது விசேஷம். இங்கே வேற ஒரு ரசம் பண்ணி ஸ்வாமிக்கு நைவேத்யம் பண்ணி ஜுரமெல்லாம் நீங்கறதுனு சொன்னா நிமிஷாம்பாள் இடத்திலே. அது பழத்தை எல்லாம் பிழிஞ்சா சாரத்துக்கு ரசம்னு பேரு. அது அதிரசம்னு பேரு. இன்னும் நன்ன விசேஷம்னு அர்த்தம். அது போல பக்தினு சொன்னாலே விசேஷம். அதிலே அதிபக்தினு சொன்னா ரொம்ப மிகுந்த பக்தினு அர்த்தம். அப்படி அதிபக்தி நாயனாருடைய விழா எல்லாம் தங்க மீன், வெள்ளி மீன் எல்லாம் போட்டு விழா எல்லாம் நடத்தறா, படம் எல்லாம் காமிச்சா ரொம்ப விசேஷம். தொடர்ந்து நீங்கள் எல்லாம் அதாவது தஞ்சாவூர் ஜில்லா என்பது சிறப்பாக பக்தியிலே இருந்தால், தமிழ்நாட்டிலேயே முழுக்க பக்தியிலே சிறக்கும். ஆகவே தமிழ்நாட்டிலே பக்தி சிறக்கணும்னா வேதாரண்யத்திலிருந்து சீர்காழி வரை இருக்கக்கூடிய இந்த, ராமர் வந்த ஊர் வேதாரண்யம், அங்கேருந்து ஞானசம்பந்தர் பிறந்த ஊர் சீர்காழி. அப்படி இடைப்பட்ட ஊர் எல்லா ஊரிலேயும், அதாவது ஒவ்வொரு ஊரிலேயும் இருந்தா பல்வேறு சிக்கல்கள் எல்லாம் தீரும். ஆகவே இந்த சிக்கல் எல்லாம் தீரரதுக்கு இந்த சிக்கல்லேந்து (நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற ஊர்) ஆரம்பிச்சு பூஜைகள் எல்லாம் விசேஷமாக நடைபெற வேண்டும். அதற்கு எங்கன், சிக்கல் என்று நிறைய க்ஷேத்ரங்கள் எல்லாம் இருக்கிறது. இப்படி தமிழ் வளறணும்னாலும் சரி, பக்தி வளறணும்னாலும் சரி, விவசாயம் - எல்லார்க்கும் சாப்பாடு கிடைக்கணும்னாலும் சரி, வியாபாரம் - அந்த காலத்திலே நாகப்பட்டினம், வேதாரண்யம், காரைக்கால் இந்த மாதிரி வியாபாரம் வளறணும்னாலும் சரி எல்லாத்துக்கும் தஞ்சாவூர் ஜில்லாவினுடைய வளர்ச்சி தமிழகத்தின் வளர்ச்சி. ஆகவே இந்த காயாரோஹணஸ்வாமி நீலாயதாக்ஷி அம்மனுடைய கோவில் திருப்பணியை சிறப்பாக செய்து மேன்மேலும் இந்த ஊர் சிறந்து அனைவருக்கும் சுபிக்ஷம், அனைவருக்கும் ஆரோக்யம், அனைவருக்கும் பக்தியிலே வளர்ச்சி ஏற்படுவதற்கு அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே என்கிற காமாக்ஷி அம்மனை, நீலாயதாக்ஷி அம்மனைப் ப்ராரத்திக்கிறோம்.


ஹர ஹர நம:பார்வதி பதயே!

ஹர ஹர மஹாதேவா!!


தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!


வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!!


ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!

 
 
 

Comments


bottom of page