top of page

Sri Kanchi Mahaswami - Sidhi Day as per British Calendar

நிச்சயம் அந்த இந்து ஞானி மிகபெரும் கடல், ஆதி சங்கரர் வழியில் வந்த மிகபெரும் இந்து ஞானி, காலம் காலமாக இந்திய மண்ணில் வாழ்ந்த ரிஷிகள் எனும் நதியின் அணைகட்டு


காலம் இதோ இந்துமதம் என காட்டிய கைகாட்டி


காஞ்சி பெரியவர் என அழைக்கபட்ட அவரின் வாழ்வு மகா மகா புனிதனமானது, ஆதிசங்கரரின் மறு ஜென்ம போல் அவரின் தேர்ந்த ஞான முதிர்ச்சியும் தெய்வத்தின் அருளும் இருந்தது


ஞானசம்பந்தரை போல் மிக சிறுவயதிலே தெய்வபணிக்கு வந்தவர் அவர், 14 வயதிலே மடத்தின் பிரதான நிலையினை அடைந்தவர்


அவர் ஞானத்தில் வளரதொடங்கிய 1907ம் ஆண்டுகள் தென்னிந்தியாவில் இந்துமதத்தை ஒழிக்க பல சக்திகள் மிகுந்த வேகத்தோடு எழுந்த காலங்கள்


அந்த காலங்களை மிக அழகாக இறைவன் இந்த ஞானியினை கொண்டு காத்தார், இங்கு தெய்வமில்லை கடவுளில்லை இந்துமதம் அழியட்டும் என பெரும் குரல்கள் ஓலமெடுத்த நேரம் வெகு சில ஜோதிகள் தெரிந்தன‌


அந்த ஞானகடல்கள் கலங்கரை விளக்காய், மலைமேல் ஜோதியாய், வறண்ட நிலத்தின் ஊற்றாய் இந்துக்களுக்கு ஆறுதலும் வழியும் கொடுத்தன‌


காஞ்சிபெரியவர், ரமணர், யோகிராம்சுரத்குமார் என வெகுசில அவதாரங்கள் அவை


அவைகள் கொடுத்த ஒளியில் இங்கே இந்துமதம் தன்னை உணர்ந்தது, இந்துக்கள் தங்களை உணர்ந்தார்கள்


இங்கே தமிழஎர்களை ஒரு கும்பல் தீவிரமாக மதம்மாற்றி கொண்டிருக்க, அவர்களுக்கு ஆதரவாய் ஐரோப்பியரே பெரியவர்கள் என ஒரு கும்பல் ஆடி தீர்த்த போது அந்த ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் வந்து இந்த குருக்கள் பாதம் பணிந்தபொழுது தெய்வத்தின் ஞானம் இந்து துவேஷிகளை கண்டு புன்னகைத்தது, ஆம், காலம் அற்புத காட்சிகளை காட்டிற்று


அதிலும் காஞ்சி பெரியவர் தனித்து ஜொலித்தார்


பவுத்த காலத்தில் சங்கரர் போல, மகா சிக்கலான சமண காலத்தின் திருநாவுக்கரசர் போல, குழப்பமான காலத்தில் ராகவேந்திரர் போல, திராவிட இந்து எதிர்ப்பு சக்திகளின் காலத்தில் அந்த ஞானமுனி நின்றார்


ஒருபிடி அவலிலும் ஒரு ஆழாக்கு பாலிலும் வாழ்ந்து ஒரு குடிசையில் உறங்கி உண்மையான ஞானி என்பதற்கு அடையாளமாய் நின்றார்


இந்து மரபான‌ சந்தியாவந்தனம், ஶ்ரீசந்திரமெளலீஸ்வரி பூஜை, ஶ்ரீபஞ்சதான்ய பூஜை, காமாட்சி அம்மன் பூஜை ஆகியவற்றைச் செய்வது வேதங்களை ஓதுவது போன்ற இவரது நடவடிக்கைகள் இவரை உலகெங்கும் பிரபலமாக்கியது, அவரை பின்பற்றி பலர் அதை செய்ய தொடங்க்கினார்கள்


இந்துமதத்துக்கு தனி மரியாதையும் கவுரவமும் அந்த தெய்வத்தால் வந்தது, அதுவரை தான் இந்து என சொல்ல வெட்கபட்டவர்கள் அல்லது இந்து என்றாலே இழிவாக பார்க்கபட்டவர்களெல்லாம் அவரின் சீடர்கள் என பெருமையாக‌ சொல்லி, நாங்கள் இந்துக்கள் எங்கள் குரு பெரியவர் என தலைநிமிர்ந்து நின்றனர்


ஆம், அவராலே இந்து சமூகம் தனி கவுரவமும் மதிப்பும் பெற்று தன்னை மீட்டு கொண்டது


எல்லா சாதி, எல்லா மதம் ஏன் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இவரது பக்தர்களாயினர். அவர்கள் சந்திரசேகர சரசுவதி சுவாமியின் பழக்கவழக்கங்களையும் அவர் வாழும் வாழ்வினையும் கண்டு அவர் ஒரு மனிதரல்ல ஜகத்குரு என அழைத்தனர்.


காமாட்சி அம்மனின் பக்தனாகவே சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் தன் வாழ்வை சேவையாக்கினார்.


ராம நாமம் அவரால் புத்துயிர் பெற்றது


ஒரு காலத்தில் இந்திய பெரும் தலைவர்களும் ராஜதந்திரிகளுமே இந்திய நலனுக்கு அவர் வழியினை பின்பற்ற சொன்னார்கள்


அரசியலில் சிறிதும் கலக்காமல் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அரசியல்வாதிகள் தன்னைபற்றி பேசவைத்த பெரும் மகான் அவர்


ஆதிசங்கரர் போல் இந்தியா முழுக்க சுற்று பயணம் செய்து மடங்களை காணுவதிலும் , வாழ்நாளெல்லாம் கோவில்களைப் புதுப்பிப்பதிலும், பெண்கள் உச்சரிக்காத விஷ்ணுசகஸ்ர நாமம் உள்ளிட்ட மந்திரங்களை உச்சரிக்கச் செய்வதிலும், சரியான உச்சரிப்புடன் வேதங்கள் ஓதுவதையும், சபரிமலை ஐயப்பன் சுவாமி மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆகியவற்றின் மீது மக்களுக்கு அதிக பக்தியுணர்வு வளரவும் அக்கோயில்களில் ஆகம விதிகள் தீவிரமாக கடைபிடிப்பதையும் நடைமுறைப்படுத்தினார்.


சிறந்த ஞானியாக ஆதிசங்கரரைப் போலவே இவரும் நாட்டின் பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றினார். பல இடங்களில் தர்மம், பண்பாடு, கலாச்சாரம் பற்றி மக்களிடம் சொற்பொழிவாற்றினார்.


திண்ணைகள், ஆற்றுப்படுக்கைகள், சிறிய கூடங்களில் கூட ஆன்மீகம் போதித்தார்


அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு தெய்வத்தின் குரல் எனும் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்நூல் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


இந்துக்களின் மிகபெரிய வேதநூல் அந்த நூல் என சொன்னால் மிகையே அல்ல‌


நாட்டின் பலபகுதிகளில் சனாதான தர்மத்தின் நடைமுறைகளைக் கொண்டு வந்தார். இதன் பயனாக பல்வேறு வேத பாட சாலைகள் உருவாக்கப்பட்டன, அதிலிருந்து எவ்வளவோ நல்ல இந்துமரபு தத்துவவாதிகள் வந்தார்கள்


இந்தியா தாண்டி உலகெல்லாம் அவருக்கு செல்வாக்கு இருந்தது, அவர் பெயரை சொன்னால் கொடும் பாவி கூட கையெடுத்து வணங்கும் காலம் இருந்தது


தமிழகத்து எந்த கொடிய நாத்திகனும் அவரை ஒருவார்த்தை குற்றம் சொல்லமுடியாதபடி தலைகுனிந்து நின்றனர், நாத்திகம் அவரிடம் கடுமையாக தோற்றது


திராவிட பாம்புகளும், புலிகளும் கருணையே உருவான அந்த கருணாமூர்த்தி முன் அப்படியே கட்டுபட்டு கிடந்தன‌


இந்தியாவின் எல்லா தலைவர்களும் ஏன் வெளிநாட்டு தலைவர்கள் கூட அவரை சந்திப்பதை பெருமையாக நினைத்து ஓடி ஓடிவந்தனர்


கருணாநிதி எனும் நாத்திக அரசியல்வாதி கூட அவரை விரும்பி சந்தித்த காலமெல்லாம் இருந்தது


தெய்வத்தின் குரல் எனும் மிகபெரிய நூலை கொடுத்த அந்த ஞானி. இந்துமதம் இன்னும் இரு நூல்கள் வர காரணமாக இருந்தார்


சோ ராமசாமியின் இந்து மகா சமுத்திரம் எனும் நூலும், கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் எனும் நூலும் அவராலே வந்தன‌


கி.வா.ஜ எனும் அற்புத தமிழ் எழுத்தாளன் அழியா இந்து ஞான நூல்களை அவராலே எழுதினான்


கிட்டதட்ட 75 ஆண்டுகள் இந்துமதத்துக்கு பெரும் சேவையாற்றிய மகான் அவர், சங்கரர் வாழா வாழ்வினையெல்லாம் வாழ்ந்து சேவை செய்த தெய்வபிறவி அவர்


எவ்வளவோ அற்புதங்கள் அவரால் நடந்தன, நம்பவே முடியாத ஆச்சரியங்களையெல்லாம் அவர் இறையருளால் செய்தார்


நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் நாம் கண்டதில்லை, ஆனால் காஞ்சி பெரியவர் உருவில் மொத்தமாக தமிழகம் கண்டது


தமிழகத்துக்கு சோதனை வரும்பொழுதெல்லாம் காமாட்சி இறங்கிவருவாள் என்பார்கள்


மதுரை டெல்லி சுல்தான்களிடம் சிக்கியிருந்தபொழுது கம்பண்ண உடையாரை அவள்தான் அனுப்பினாள், மீண்டும் அந்த காஞ்சி பிஜப்பூர் சுல்தானிடம் சிக்கியபோது வீரசிவாஜியினை அவளே அனுப்பினாள்


காஞ்சி காமாட்சி அப்படி சக்திவாய்ந்தவள், இன்னும் எத்தனையோ மகான்கள் அங்கிருந்து எழும்பி சனாதன தர்மம் காத்தார்கள்


ஆதிசங்கரர் தொழுத அந்த காமாட்சி சரியான நேரத்தில் சரியான ஆட்களை அனுப்பி கொண்டே இருப்பாள்


அப்படி திராவிட நாத்திக கொடுங்கால தொடக்கத்தில் பிறந்து அது வெறியாட்டும் ஆடும் காலத்தில் இந்துக்களை காத்து, இந்த விளக்கு அணையாமல் தன்னையே எண்ணையாக ஊற்றி காத்து அந்த கொடும் நாத்திக கும்பலெல்லாம் அழிவதை பார்த்து தன் அவதாரத்தை முடித்தர் அந்த பெரியவர்


இன்று அந்த அவதாரம் தன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டு மறைந்த நாள்


ஞானம் , தவம், யோகம் என காக்கும் பிரம்மசரிய விரதத்தால் ஒருவன் இறைவனை உணரமுடியும், முக்காலமும் உணர்ந்து தெய்வமாக ஜொலிக்க முடியும், காமாட்சியின் அருளில் ஜெகத்குரு ஆக முடியும் என காட்டிய அந்த ஞானபிழம்பின் அவதார நாள்


உலகெல்லாம் கொண்டாடபட்ட இந்து அவதாரம் ஒன்று கடமை முடித்த நாள்


அவரை பற்றி எழுத ஒரு நாள் போதாது, கடலில் ஒரு துளி போல் அந்த மகானை பற்றி ஒரு சிப்பியில் எடுத்து சொல்லியிருகின்றோம்


மிகபெரிய தொடராக எழுத வேண்டிய மகா பெரிய புனிதவாழ்வு அவருடையது, அன்னை காமாட்சி ஆசிவழங்கினால் அதை பிரிதொரு நாளில் எழுதலாம்


அந்த தெய்வ அவதாரத்தின் பிறந்த நாளில் அந்த மகானை ஒருமுறை ஆழ்ந்த மூச்சுடன் சிந்தை நிறைய நினைத்தால் செய்த பாவமெல்லாம் கரைந்து இறையருள் எல்லோருக்கும் நிரம்பும்


அந்த ஞானமூர்த்தி எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்


ஆதிசங்கரரின் மறுபிறப்பாக வந்து, சம்பந்தரும் சங்கரரும் வாழாத வாழ்வின் மீதிவாழ்வாக வந்து நம்மோடு இருந்து இந்துமதம் என்றால் என்ன? அதன் தர்மம் என்ன? அதன் மாபெரும் தாத்பரியம் என்ன என்பதை சொல்லி நின்றவர் அவர்


எத்தனையோ கோவில்களை புணரமைத்து, கோபுரங்களை கட்டி பெரும் பணி செய்தவர் அவர்


சமஸ்கிருத ஸ்லோகம் தத்துவங்களையெல்லாம் தமிழில் தந்து நம்மையெல்லாம் படிக்க வைத்தவர் அவர் எவ்வளவோ அருமையான நூல்கள் வர காரணம் அவர்


ஆயிரகணக்கான குடும்பங்களுக்கு மாபெரும் அற்புதங்களை செய்து காத்து குலதெய்வமாய் நிற்பவர் அவர்


இந்துக்கள் இன்றும் இந்துக்களாய் நீடிக்க மாபெரும் அற்புதமும் அதிசயமும் செய்து காவல் இருந்தவர் அவர்


அந்த மகான் வந்து உதித்து இந்த அளவு இங்கு காவல் இருந்திருக்காவிட்டால் நிச்சயம் பெரும் குழப்பமும் விபரீதமும் ஏற்பட்டிருக்கும், அதையெல்லாம் தடுத்து தர்ம தீபத்தை ஏற்றிவைத்தவர் அவர்


அவரின் பூத உடல் மறைந்திருக்கலாம், அந்த மாபெரும் தவ ஆத்மாவின் காலம் பூமியில் முடிந்திருக்கலாம் ஆனால் அந்த மகா பெரிய ஆத்மா,


மகாத்மா


ஒவ்வொருவர் உள்ளத்தையும் தொட்ட வரலாறும், இன்று காஞ்சி பெரியாவர் என்றாலே கொடிய நாத்திகனும் கைகூப்பி வணங்கும் வரலாறும் நாள்தோறும் நடந்து கொண்டிருப்பவை


இன்றும் அரூபியாய், வழியற்றவருக்கு விழியாய், பாதை தெரியாதவருக்கு வழிகாட்டியாய், தவிப்போருக்கு தஞ்சமாய், இருளில் இருப்போர்க்கு ஒளியாய் , இந்து ஜோதியின் பெரும் வடிவாய் அவர் திகழ்கின்றார்


அந்த ஞானபெரும் ஜோதி எக்காலமும் இந்துமதத்தை காக்கும் , இந்த தர்மத்தை காக்கும் , காத்து கொண்டே இருக்கும்


அவசிய தேவை ஏற்படின் அது மறுபடியும் அவதரித்து இந்த மதத்தையும் தர்மத்தையும் எளிதாக மீட்டெடுக்கும்


நம் கண்முன் மகா புனிதனாக, வாழும் தெய்வமாக வாழ்ந்து , இந்துக்களின் தனிபெரும் அடையாளமாக குல தெய்வமாக திகழும் அந்த மகானின் நினைவுகளோடு அவரின் ஜனன தினத்தை கொண்டாடுகின்றது நன்றியுள்ள இந்து சமூகம்


அயோத்தி ஆலய மீட்பில் காஞ்சி மடத்துக்கும் நிறைய பங்கு உண்டு, அந்த சிக்கல் உச்சத்தில் இருந்த போது காஞ்சி மகா பெரியவர் கொடுத்த ஆலோசனைகளும் அறிவார்ந்த வாதங்களும் ஏராளம்


சட்டரீதியான வாதங்களில் அயோத்தியில் ராமபிரான் ஆலயத்தை மீட்டெடுத்ததிலும் எப்படி ஆலயம் அமையவேண்டும் என அன்றே சொன்னதிலும் காஞ்சி மகாபெரியவரின் வழிகாட்டல் உண்டு


இந்துசமூகம் அவரிடமிருந்து பெற்ற பெரும் ஞானமான அணுகுமுறைகள் உண்டு


காஞ்சி மகாபெரியவர் ஒவ்வொரு நாளும் நினைக்கபடவேண்டியவர் என்றாலும் இவ்வருடம் அயோத்தி ஆலயம் திறக்கபடும் நேரம் அவரை கூடுதலாக நினைந்து கண்ணீர் நன்றி தெரிவிக்கவேண்டியது இந்துக்கள் கடமை


இன்றும் அரூபியாக நின்று இந்துமக்களை வழிநடத்தும் அந்த ஞானசுடரின் பாதங்களில் விழுந்து வணங்கி பிரார்த்திப்போம், தேசம் உயர்வடைய அவர் எல்லா அருளும் ஆசீகளும் வழங்கட்டும், தேசம் வலுக்கட்டும்

--ஸ்டான்லி ராஜன்

0 views0 comments

Comments


bottom of page