2532 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் அவதரித்த ஆதிசங்கரர், இந்து சமயத்தின் பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைத்து ஆன்மீக ஒளியால் நாட்டை மேம்படுத்த பாரததேசம் முழுவதும் விஜய யாத்திரை மேற்கொண்டார்.
திருவானைக்காவல் விஜயம்
திருவானைக்காவலில் அகிலாண்டேஸ்வரியின் அளப்பரிய ஆன்மீக சக்தியை உணர்ந்த ஆதிசங்கரர், அம்பாள் உக்கிரமாக இருந்ததை அறிந்து பக்தர்களின் நலன் கருதி சாந்தப்படுத்த முடிவு செய்தார்.
தாடங்கப் பிரதிஷ்டை
அம்பாளின் உக்கிரத்தைத் தணிக்க, ஸ்ரீ சக்கரத்தை இரண்டு தாடங்கங்களாக வடிவமைத்து அம்பாளின் காதுகளில் அணிவித்தார். ஸ்ரீ சக்கரம் என்பது பிரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி, ஸ்திதி மற்றும் லயத்தைக் குறிக்கும் புனித ஆனந்தமய ஸ்வரூபம். இந்த தாடங்கங்கள் அம்பாளின் உக்கிரத்தைச் சாந்தப்படுத்தி, கருணை மற்றும் அன்பின் வடிவமாக மாற்றி, பக்தர்கள் ஆசி பெற வழி செய்கின்றன.
தாடங்கத்தின் சிறப்பு
“தாடங்கம்” என்பது அலங்கார காதணிகள் மட்டுமல்ல, யந்த்ரராஜம் எனப்படும் ஸ்ரீசக்ரத்தின் வடிவிலான, அம்பாளின் ஆழமான தெய்வீக சக்தியைக் குறிக்கக்கூடிய காதணிகள். லலிதா ஸஹஸ்ரநாமத்தில் "தாடங்கயுகளீபூத-தபனோடுப-மண்டலா" என்று அம்பாள் தாடங்கத்துடன் விளங்குவதின் சிறப்பு வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆதி சங்கரர் தனது சௌந்தர்யலஹரியிலும் இவற்றின் சிறப்பை வர்ணித்துள்ளார். பிரம்மாதி தேவர்கள், இந்திரன் முதலியவர்கள் அம்ருதத்தைப் பருகியும் கூட சில சந்தர்பங்களில் ச்ரமத்தை அடைகின்றனர். ஆனால் பரமசிவனோ மிகக் கொடிய ஆலகால விஷத்தை உட்கொண்டும் சங்கடங்களேதுமில்லாமல் இருப்பது உன்னுடைய தாடங்கத்தின் மகிமையால்தானே? என்று "தவ ஜனனி! தாடங்கமஹிமா" என்பதாக ஆதிசங்கரர் வர்ணித்துள்ளார்.
தாடங்கப் பிரதிஷ்டையும் காமகோடி பீடமும்
ஸ்ரீ ஆதிசங்கரரால் ஏற்படுத்தப்பட்ட இந்த தாடங்கங்களை அபிஷேக ஆராதனை காலங்களில் கழற்றி, மீண்டும் சாத்துவதனால் ஏற்படக்கூடிய பழுதுகளை நீக்கவும், மந்திர ஜப, ஹோம, அபிஷேகாதிகளால், தாடங்கங்களில் உள்ள யந்திரங்களின் மந்திர சக்தியினை மீண்டும் முறையாக உருவேற்றி புனரமைத்தல் என்பதும் மிகப் பெரிய ஆன்மிகப் பணி. இப்பணியினை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்திடும் உரிமை ஆதிசங்கர பகவத்பாத பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞபீடமான ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடத்தின் ஆச்சார்ய பரம்பரைக்கே உரித்தானது. இந்த பாரம்பரிய உரிமை நூறாண்டுகளுக்கு முன்னரே உரிய முறையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம் அவ்வப்போது இந்த தாடங்கங்களைப் புதுப்பித்து பிரதிஷ்டை செய்து வருகிறது. அண்மை நூற்றாண்டுகளில்:
கி.பி. 1686 அக்ஷய ௵ பீடத்தின் 59-ஆவது ஆசார்யர்களான, ஸ்ரீபகவந்நாம போதேந்த்ரஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளாலும்,
கி.பி. 1757 ஈஸ்வர ௵ 62வது ஆசார்யர்களான, ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளாலும்,
கி.பி. 1846 பராபவ ௵ 64வது ஆசார்யர்களான, ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளாலும்,
கி.பி. 1908 பிலவங்க ௵ 68வது ஆசார்யர்களான ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளாலும்,
கி.பி. 1923 ருதிரோத்காரி ௵ 68வது ஆசார்யர்களான, ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளாலும்,
கி.பி. 1992 ப்ரஜாபதி ௵ 69வது ஆசார்யர்களான, ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகள் மற்றும் 70வது ஆசார்யர்களான, ஸ்ரீசங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளாலும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரீ அம்பாளுக்கு தாடங்க ப்ரதிஷ்டை சிறப்புடன் நிகழ்த்தப்பட்டுள்ளன.
சமீபத்தில், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் தாடங்கங்கள் சற்று ஜீர்ணமாகி இருப்பதை தேவஸ்தான நிர்வாகிகளும், பூஜகர்களும், ஸ்தலத்தாரும், பாரம்பரிய வழக்கப்படியே, மூலாம்நாய ஸர்வஜ்ஞபீட ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதிகளான ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளிடம் விண்ணப்பித்து, அவற்றை சீர் செய்து, மீண்டும் அம்பிகையின் கர்ணங்களில் பிரதிஷ்டை செய்ய வேண்டினர். அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தாடங்கப் பிரதிஷ்டைக்காக திருவானைக்காவல் சங்கர மடத்தில் பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் முகாமிட்டுள்ளார்.
பிப்ரவரி 13ம் தேதி முதல் நான்கு வேதங்கள் மற்றும் புராணாதி பாராயணங்களோடு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 16ம் தேதி காலை 11.41 மணி முதல் 12.00 மணி வரையிலான காலத்தில் தாடங்கப் பிரதிஷ்டை நடைபெற உள்ளது.
தாடங்க பிரதிஷ்டை ஒரு சக்திவாய்ந்த சடங்காகும், இது அம்பாளின் அருள் மற்றும் பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களை மேம்படுத்துவதாகும். இந்த தாடங்க பிரதிஷ்டையானது திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடத்தின் நீடித்த ஆன்மீக பாரம்பரியத்தை நினைவூட்டுகிறது.
பூஜ்யஸ்ரீ ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த தாடங்க பிரதிஷ்டை ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் புனித சடங்கைக் காணவும், தங்கள் நம்பிக்கையுடன் மீண்டும் இணையவும், அகிலாண்டேஸ்வரியின் ஆசீர்வாதங்களைப் பெறவும் இது ஒரு வாய்ப்பு. விழாவுக்கான ஏற்பாடுகள் தொடரும் அதே வேளையில், இந்த பண்டைய பாரம்பரியத்தின் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், திருவானைக்காவலில் எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.
காலம் தோறும், சீர் செய்யப்பட்டு மந்திர பூர்வமாக உத்வேகப் படுத்தப்பட்டதான தாடங்கங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு இகபர சுகங்கள் யாவும் நிச்சயம் வசப்படும். மேலும் அவரவர் நல்வாழ்வுக்கு வேண்டிய நியாயமான வரங்களையும் தலைமுறைக்கும் வேண்டுமளவிற்கு பக்தர்கள் பெற்று மகிழலாம்.
சிறுப்பு குறிப்பு
1976 ஆம் ஆண்டு காமாட்சி அம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, ஸ்ரீ மஹா பெரியவா அவர்களின் அருளால், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் தனது இரு காதுகளிலும் தாடங்கங்கள் ஜொலிக்க காட்சி தரும் அரிய புகைப்படம் வெளியிடப்பட்டது. அதே புகைப்படம் மீண்டும், இன்று பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளாலும் தாடங்க ப்ரதிஷ்டையை முன்னிட்டு வெளியிடப்படுகிறது. பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களுடன் எப்போதும் வைத்துக் கொள்ளும் வகையில் சிறிய அளவிலும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு, ஸ்ரீ மடத்தின் 68வது பீடாதிபதியான ஸ்ரீ மஹா பெரியவாள், 1922ஆம் ஆண்டு செய்த தாடங்க பிரதிஷ்டையின் நூற்றாண்டு நிறைவை குறிக்கும் வகையில் அமைந்தது. நூறாண்டுகள் நம்மிடையே "நடமாடும் தெய்வமாக" வாழ்ந்து, தமது தபோ பலத்தால் ஆன்மீக சாதனைகள் புரிந்த ஸ்ரீ மஹா பெரியவாளின் கருணையை இப்படம் வெளிப்படுத்துகிறது.
"தவ ஜனனி தாடங்க மஹிமா" என்ற சௌந்தர்ய லஹரி வாசகத்துடன் இப்படம் அச்சிடப்பட்டிருப்பது, அதன் பெருமையையும், பலன்களையும் மேலும் உயர்த்துகிறது.
காதணிகளின் பெருமை
சதாரா நகரில் மஹா பெரியவா முகாமிட்டிருந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தனது மனைவியுடன் அவரை தரிசிக்க வந்தார். அப்போது அவர், "பற்பல ஜாதிகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட இந்து மதத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான அடையாளம் ஏதும் உண்டா?" என்று கேட்டார்.
அதற்கு ஸ்ரீ மஹா பெரியவாள், "கர்ண வேதனம்" எனும் சடங்கை (காதுகுத்தும் விழாவை) ஒரு உறுதியான இந்துக்களின் அடையாளமாகக் கடைப்பிடிப்பதை பதிலாகத் தந்தார். இந்த சடங்கை நினைவுபடுத்துவதன் மூலம், இந்துக்களின் பாரம்பரிய வழக்கங்களின் வழியாக அனைத்து இந்து மத பிரிவினரிடையே ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தலாம் என்று அவர் கூறினார்.
இந்த தாடங்க ப்ரதிஷ்டை நேரம் மிக உன்னதமான முகூர்த்த நேரமாகும். ஆதலால் அந்த நல்ல முகூர்த்தத்தில் மக்கள் தம்தம் இல்லத்திலுள்ளசிறுவர் சிறுமிகளுக்கு கர்ண வேதனம் எனும் காதணி விழாவினை நடத்திக் கொள்வது அவர்களுக்கு மிக உன்னத பலன்களை அளிக்க வல்லது. திருவானைக்காவில் ஶ்ரீமடம் கிளையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேஷ பந்தலில் காதணி விழாவினை நடத்திக் கொள்ள வசதிகள் செய்து கொடுத்து இச்சிறுவர்களின் எதிர்கால க்ஷேமத்திற்கு கருன புரிந்தார்கள்.
Kommentare