1941—ஆம் ஆண்டு சாதுர்மாஸ்யத்தின்போது ஸ்ரீசரணாள் நாகப்பட்டினத்தில் முகாமிட்டிருந்தார். அதனிடையில் ஆடிப்பூரம் வந்தது. வழக்கமாக அப்போது நீலாயதாக்ஷி அம்பாளுக்கு மிகவும் விமரிசையா உத்ஸவம் நடக்கும். ஆனால் அவ்வாண்டு? ஊர் மழை கண்டு எத்தனையோ காலமாகியிருந்த சமயம். சொல்லி முடியா தண்ணீர்ப் பஞ்சம். குளம், குட்டை, கிணறு யாவும் வறண்டு கிடந்தன.
எனவே உத்ஸவத்துக்கு யாத்ரீகர்கள் வரவேண்டாமென்றே அறிக்கை விடுவதற்குக் கோவிலதிகாரிகள் எண்ணினர். எனினும் அதற்கு முன் தங்கள் ஊரில் எழுந்தருளியுள்ள மஹானிடம் விண்ணப்பிக்க நினைத்து ஸ்ரீமட முகாமுக்கு ஒருநாள் காலை வேளையில் வந்தனர்.
அவர்கள் குறையிரந்ததை சோகம் என்றே கூறக்கூடிய ஆழுணர்ச்சியுடன் அருள்மூர்த்தி கேட்டுக் கொண்டார். வாய் திறந்து ஏதும் சொல்லவில்லை. சொல்ல அவசியமில்லாமல் அடியோடு முடி அவரது திருவுருவே இரக்கத்தின் உருக்கமாக இருந்தது. மௌனமாகவே பிரசாதம் ஸாதித்து அவர்களை அனுப்பிவிட்டு ஏகாந்தத்திற்குச் சென்று விட்டார்.
அரைமணி ஆனபின் ஆலயத் திருக்குளத்திற்குச் சென்றார். குளமாகவா அது இருந்தது? தள்ளித் தள்ளிச் சில இடங்களில் குளம்படி நீர் தேங்கியிருந்தது தவிர மற்ற இடமெல்லாம் காய்ந்த பூமியாகவோ, சேறாகவோதான் இருந்தது.
தேடித் தேடி ஒரு சிறிய குழியில் தமது சின்னஞ்சிறு ஸ்ரீ சரணங்களை ஸ்ரீசரணர் அழுத்த, சீரார் சேவடி அமிழும் அளவுக்கு---அந்த அளவுக்கே--- நீர் சுரந்தது.
ஆச்சரியமாக, தனது அப்பாத நீரையே அவர் சிரஸில் புரோக்ஷித்துக்கொண்டார்!
முகாமுக்குத் திரும்பினார் முனிவர்.
அன்று பகலெல்லாம் கடும் வெயில் காய்ந்தது.
மறுநாள் மதியம் மறுபடி திருக்குளத்திற்குச் சென்றார்..
முன்தினம் கண்ட குளம்படித் தேங்கல்களும்கூட சேறாகவோ, காய்ந்த கட்டி மண்ணாகவேயோ சுவறிக்கிடந்தன!
இன்று திவ்ய ஹஸ்தத்தாலேயே அவற்றிலொரு சேற்றுத்திட்டைச் சுரண்டினார். ஒரு சில துளிகள் நீர் சுரந்தது.
வலப்பாதப் பெருவிரலை அதில் ஐயன் அமிழ்த்த அது போதும் போதாததாக முழுகியது..
திருவிரல் நீரில் நனைந்திருக்க, நனைந்த திருவுள்ளத்தோடு ஐயன் ஆகாயத்தை நிமிர்ந்து நோக்கினார்.
ஈரப்பசையே இல்லாத வெண்மேகங்கள் ஆங்காங்கு மூடியிருந்தாலும் பெரும்பாலும் தெள்ளிய ஒளி நீலமாகவே வானம் விளங்கியது._கருணா சோக ( கருண ரஸம் என்பதே சோகந்தானே!) மேகம் மூடியுங்கூட, மூடவொண்ணா அகண்ட அமைதி வெளியாக!.
தண்டத்தை இறுகப் பிடித்தவாறே, வானை நோக்கி இரு கரங்களையும் தூக்கி அஞ்சலி செய்தார்.
அருளும் அமைதியும் இனம் பிரிக்க முடியாமல் செறிந்திருந்த மௌனத்துடன் மட முகாமுக்குத் திரும்பினார்.
பிற்பகல் நான்கு மணியளவில் ஈரமற்ற வெண்முகில்கள் குளிர் நீலமாக மாறத்தொடங்கின. வெப்பத்தைச் சமனம் செய்யும் சீதக் காற்றும் மெல்ல வீசலாயிற்று.
சிறிது பொழுதில் சிறு தூறல்கள் சிதறலாயின.
அப்புறம் அது அடர்ந்து அடர்ந்து அப்படியே அடைமழையாகப் பொழியலாயிற்று!
இரவெல்லாம் பொழிந்தது.
மறுனாள் முழுதும் பொழிந்தது.
அதற்கு மறுநாளும்,ஏன், நான்காம் நாளும்கூட விடாமல் பொழிந்தது.
நிமலனின் அருள் வேண்டுதல் வடிவில் தூண்ட, நீலாயதாக்ஷி நீலவானையே கண்களாகக்கொண்டு கருணா கடாக்ஷப் பெருக்காகப் பொழிந்து தீர்த்தாள்!
------------------நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையே!
என்ற வாதவூரார் வாசகம் மெய்யாயிற்று.
குளம், குட்டை, கிணறு எல்லாம் முட்ட முட்ட நிரம்பின.
ஊர் குளிர, ஊரார் உளம் குளிர உத்ஸவமும் வழக்கத்தைவிட விமரிசையாக நடந்தேறியது. வாடிய நெஞ்சங்களுக்கு வான் கருணை வழங்கிய உத்ஸாகத் தளிர்ப்பே உத்ஸவ விமரிசை வழக்கத்தைவிடக் கூடியதற்குக் காரணம்.
இந்த நிகழ்ச்சிக் கோவையை உடனிருந்து கண்டு உவகையோடு வர்ணிக்கும் செல்லம்மாள்( 1993—ல் பரம பதம் எய்திய நீண்ட காலப் பரம பக்தை) சொல்வாள்: “ கோவில்காரர்கள் யாத்ரிகர் வர வேண்டாமென்று அறிவிப்பு செய்ய நினைத்தார்கள். பெரியவாளோ ஆகாசராஜனையும், வருணபகவானையும் கொண்டு அம்பாள் உத்ஸவக் கல்யாணத்திற்கு அத்தனை பேரும் வருவதற்கு அழைப்பு அனுப்பி விட்டார்! கிருஷ்ண பரமாத்மா கை விரலால் மலையைத் தூக்கிக் கனமழையைத் தடுத்து நிறுத்தினாரென்றால், நம்முடைய குரு பரமாத்வாவோ கால்விரலால் பூமியை அழுத்தி கனமழையை வருவித்து விட்டார்.!”
ஆயினும் கண்ணன் போலத் தெய்வீக மகிமையை வெளிக்காட்டாது ஸ்ரீராமனைப் போல் மானுடமாகவே எளிமை காட்டியவரன்றோ நம் பரம குருநாதன்? அதனால்தான் ஸ்ரீ சரண மஹிமையை மறைத்துக் கரங்களை எளிமையில் குவித்து வானை நோக்கி அஞ்சலி செய்தே மழை வருவித்ததாகக் காட்டினார்!
Jaya Jaya Shankara hare hare Shankara
Comentarios