ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், வாராணஸி முகாமில் தமிழ்நாட்டிலிருந்து தரிஶனத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு 77 ஆவது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்தும் தேசியக் கொடி வழங்கியும் அவர்களின் நகர்வலத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் சுருக்கம்:
“இந்தியாவில் பன்மொழிகளை தாய் மொழிகளாகக் கொண்ட 130 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பல்வகை உணவு உடை பழக்க வழக்கங்களை தம் தம் பாரம்பரியமாக மேற்கொண்டவர்களாக இருப்பினும், “பாரதம்” ஒரே தேசம், என்பது நிதர்ஸனம். தேசம் முழுவதும் தர்மமும் ஒன்றேதான். சுதந்திரம் என்பது தர்மத்தை அனுஷ்டிப்பதற்கான சுதந்திரம் என்பதும். பெற்றோர் சொல்படி நடப்பது, விருந்தினர்களை உபசரிப்பது போன்றவை எளிமையான தர்மமீகும். மனிதர்களின் இயல்பான தயை, கருணை அன்பு இரக்கம் முதலியவற்றை வளரச் செய்வது தர்மம். அவரவர் நிலையில் தர்மம் தவறாது நெஞ்சில் இரக்கமுடன் கடமையாற்றியும், செய்ய வேண்டியவற்றை செய்தும், செய்யத் தகாதனவற்றை அரவே தவிர்த்தும் பல்வகை சமூகத்தினர் அனைவரின் முன்னேற்றத்திற்கும் தொண்டாக, நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் செயல்படுவது தர்மம். நமது தேசத்தில் தர்மம் வளர்வதற்காக பாடுபட வேண்டிய நேரமிது. அறம் செய விரும்பு என்பதே நல் வாக்காகும். 1947ல் முதல் சுதந்திர தினத்தன்று ஶ்ரீ பரமாச்சார்யர்கள் அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கியதோடு உண்மையான சுதந்திரம் என்பது தர்மத்தைக் கடைபிடித்து கிடைக்கக் கூடிய ஆன்மிக சுதந்திரமே, என்றார்கள். புதுப் பெரியவர்கள், அனைத்து சமுதாய மக்களும் ஒற்றமையுடன் தர்ம நெறியில் வாழ வேண்டும் என அரும்பாடு பட்டார்கள். மக்கள் அனைவருக்கும் குரு பக்தி, தெய்வ பக்தி தேசபக்தி இம் மூன்றும் அவசியம். தெய்வ பக்தி தேசபக்தி என இவை இரண்டும் நிறம்பிய ஏராளமான பாடல்களைப் பாடிய மகாகவி பாரதியார், 1919 ஆண்டு கும்பகோணம் ஶ்ரீமடத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்ட நவராத்திரி விழாவினை கண்டு பக்தி மேலீட்டால்,” ஶ்ரீமடம் தந்தி பேசியது” என்ற தலைப்பில் பராசக்தி பக்தரான பாரதியார் ஶ்ரீமடத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். 1934ல் தென் இந்தியாவிலிருந்து பூஜை முதலியவைகளுடன் யாத்திரை செய்து காஶி மாநகர் அடைந்த ஶ்ரீ பரமாச்சார்யாளுக்கு பண்டிட் மதன் மோகன் மாளவியா அளித்த மாபெரும் வரவேற்பை இந்த சுதந்திர திருநாளன்று காஶி முகாமில் நினைவு கூறுவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். அஹிம்ஸை வழியில் அறம் வளர்த்து அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டி தெய்வ பக்தி, தேச பக்தி முதலியவற்றின் துணை கொண்டு, நாடு முன்னேற, நாம் முன்னேற நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருந்து உழைப்போம். ஜய ஜய ஶங்கர ஹர ஹர ஶங்கர.”
Comments