பழையாறை வடதளி ஆலயத்தில் திருமுறை இசை வழிபாடு
சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கியது பழையாறை மாநகரம் ஆகும். பரந்து விரிந்த இந்நகரில் சோழர்களின் மாளிகையும், படைகள் தங்கும் இடங்களும், ஆயுத சாலைகளும் இருந்ததாகச் சரித்திர ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்நகரின் நான்கு திசைகளிலும் சோழர்களின் ஆலயங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.
பழையாறை நகரில் விளங்கும் சோமநாத சுவாமி ஆலயத்தைத் தவிரவும், பழையாறை மேற்றளி, தென்தளி, வடதளி ஆகிய ஆலயங்களுக்கு இடையில் பட்டீசுவரம், திருச்சத்திமுற்றம் ஆகிய இடங்களிலும் சிவாலயங்கள் இருக்கக் காணலாம். பழையாறையின் பஞ்சகுரோசத்தலங்களாவன, திருநல்லூர், திருவலஞ்சுழி, திருச்சத்திமுற்றம், திருப்பட்டீச்சுரம், திரு ஆவூர் ஆகியனவாம். பழையாறையில் உள்ள கோயில்களுள், பட்டீச்சுரம் மட்டுமே அதிகமாக மக்கள் வருகை தரும் கோயிலாக உள்ளது.
முழையூரில் பரசுராமரால் பூஜிக்கப்பட்ட சிவாலயமும், திருநாவுக்கரசரின் தேவாரத்திருப்பதிகம் பெற்ற வடதளியாகிய தருமபுரீசுவர சுவாமி ஆலயமும் விளங்குகின்றன. பழையாறை வடதளியிலுள்ள சிவாலயம்,கோச்செங்கட்சோழனால் கட்டப்பெற்ற மாடக்கோயிலாகும். அம்பிகை விமலநாயகி என்று அழைக்கப்பெறுகிறாள். கட்டைகோபுர வாசலைக்கடந்தவுடன் அகன்ற வெளிப்பிரகாரம் காணப்படுகிறது. இதில் பல இலிங்கத்திருமேனிகளை ஒரே இடத்தில் காணலாம். படிகள் ஏறினால் மாடக்கோயிலின் பிரகாரத்தை அடைகிறோம். கோஷ்ட மூர்த்திகளைத் தரிசித்தபின்னர் இறைவனது மகா மண்டபத்தை அடைகிறோம். உயர்ந்த பாணத்துடன் பட்டைகளோடு சுவாமி அற்புதத் தரிசனம் தருகிறார். தெற்கு நோக்கியவாறு அம்பிகை சந்நிதியும், முருகன் சந்நிதியும் காணப்படுகின்றன. சமண சமயம் மேலோங்கி இருந்த காலத்தில் இக்கோயில் வழிபாடின்றி மூடப்பட்டிருந்தது. அப்போது அங்கு தலயாத்திரையாக வந்த திருநாவுக்கரசர் அதைக்கண்டு மனம் வருந்தி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனை அரசனின் கனவில் இறைவன் அறிவித்தவுடன், மன்னனது ஆணைப்படி கோயில் மீண்டும் திறக்கப்பட்டது என்பது பெரியபுராணம் காட்டும் செய்தி.
கடந்த சில ஆண்டுகளாக திரு. சிவபாதசேகரன் அவர்களிடம் தேவாரத்திருமுறைகள் பயிலும் குடந்தை மற்றும் சென்னை, தஞ்சை ஆகிய ஊரில் வசிக்கும் அன்பர்கள், ஒருகால பூஜையே நடைபெறும் பழையாறை வடதளி ஆலயத்தில் 11-12-2022 அன்று சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தினார்கள். ‘திருமுறை இசைப்பயிற்சி’ என்ற நூலும் அச்சிடப்பட்டு அன்பர்களுக்கு விநியோகிக்கப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருமுறை பயிற்றுவிக்கும் திரு. சிவபாதசேகரன் அவர்களும், ‘திருப்புகழ் அமுதன்’ வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் அவர்களும் வந்திருந்து சிறப்பித்தார்கள்
Comments